மதுரையில் 33½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


மதுரையில் 33½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 16 Jan 2022 6:30 PM GMT (Updated: 2022-01-17T00:00:48+05:30)

மதுரையில் 33½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

மதுரை, 
கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில் மதுரையில் 33½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. முன்கள பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு முதன் முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்னர், வயது வாரியாகவும், இணை நோயாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்தநிலையில் பள்ளி மாணவ, மாணவிகளான 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தமிழக அரசு தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தியது. அந்த முகாம்களில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
33 லட்சத்தை தாண்டியது
மதுரையில் நடந்த முகாம்களிலும் ஏராளமானவர்கள் வாரம் தோறும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதுவரை மதுரையில் 33 லட்சத்து 53 ஆயிரத்து 999 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி நேற்றுடன் ஒரு வருடம் முடிந்த நிலையில் இந்த இலக்கை அடைந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "தடுப்பூசி போடும் திட்டம் மதுரையில் தான் தொடங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையின் மூலம் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் காரணமாகவே இந்த மிகப்பெரிய இலக்கை அடைய முடிந்துள்ளது.
அச்சம் இன்றி
தற்போதும் கிராம புறங்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்கள் யார் என்பது குறித்து கணக்கெடுக்கும் பணியும் நடக்கிறது. மேலும், பொதுமக்களின் வசதிக்காக வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மீண்டும் கொரோனா அதிகம் பரவி வரும் நிலையில், அதில் இருந்து நம்மை காக்கும் ஆயுதமாக தடுப்பூசி இருக்கிறது. 
எனவே தகுதி உள்ள அனைவரும் கட்டாயம் எந்த வித அச்சமும் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
கையிருப்பு
பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார கிடங்கு உள்ளிட்ட இடங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கிறது" என்றனர்.

Next Story