அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 16 Jan 2022 7:24 PM GMT (Updated: 16 Jan 2022 7:24 PM GMT)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது

அலங்காநல்லூர், 
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்தநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டு பொங்கலையொட்டி கடந்த 14-ந் தேதி அவனியாபுரத்திலும், நேற்று முன்தினம் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு நேற்று அமலில் இருந்ததால் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு, இன்று (திங்கட்கிழமை) அங்கு ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
வாடிவாசலில் கோவில் மாடுகள்
ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி அங்குள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு பாரம்பரிய வழக்கப்படி விழா கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் நேற்று சாமி கும்பிட்டனர். 
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டிய நாள் என்பதால், கோவில் மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, சம்பிராதய முறைப்படி அங்குள்ள வாடிவாசல் முன்பு கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர். 
அமைச்சர் ஆய்வு
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோன்று ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்கக்காசு வழங்கப்படும்.
கார்-தங்கக்காசுகள்  
மேலும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் சார்பாக சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோல் மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும் தலா ஒரு தங்கக்காசு வழங்கப்பட உள்ளது. 
இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த 3 தினங்களாக முழு வீச்சில் நடந்து வருகிறது. இறுதிக்கட்ட பணிகளும் நடக்கிறது. வாடிவாசல் முழுமையாக அமைக்கப்பட்டு விட்டது. அதுபோல், வாடிவாசலுக்கு பின்பகுதியில் காளைகள் வரிசையாக வந்து செல்லும் பகுதியிலும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் அமர்வதற்கும் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
700 காளைகள்
ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் கூறுகையில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில், 700 காளைகள் கலந்து கொள்கின்றன. 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கும், காளைகளின் உரிமையார்கள், உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என சான்றிதழ் அளிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள முடியும். இதுபோல் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களும் வைத்திருக்க வேண்டும். அரசு அறிவுறுத்தலின்படி, 150 பார்வையாளர்கள் அல்லது 50 சதவீத பார்வயைாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை நடைபெறும். முககவசம் அணிந்தே அவர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
வித்தியாசமான வாடிவாசல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டு குழு தலைவர் சுந்தர்ராஜன் கூறுகையில், "மற்ற இடங்களில் உள்ள வாடிவாசல்களை விட அலங்காநல்லூர் வாடிவாசல் வித்தியாசமானது. மற்ற இடங்களில் வாடிவாசலில் அவிழ்த்து விடும் காளைகள், நேரடியாக காளைகள் வெளியேறும் இடத்திற்கு சென்று விடும். ஆனால், அலங்காநல்லூரில் வாடிவாசலில் வெளியேறும் காளைகள் உடனடியாக இடது பக்கம் திரும்ப வேண்டும். இதனால், காளைகள் சிறிது நேரம் குழப்பம் அடைய வாய்ப்பு நேரிடும். இந்த நேரத்தில் காளையை, மாடுபிடி வீரர்கள் அடக்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இதனால், இந்த போட்டி பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். எனவே ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க வருவார்கள்" என்றார்.

Next Story