வேகமாக சென்றபோது டயர் வெடித்ததால் தடுப்பு கம்பியில் மோதி சாலையில் கவிழ்ந்த கார்


வேகமாக சென்றபோது டயர் வெடித்ததால் தடுப்பு கம்பியில் மோதி சாலையில் கவிழ்ந்த கார்
x
தினத்தந்தி 17 Jan 2022 12:03 AM GMT (Updated: 2022-01-17T05:33:53+05:30)

சாலையில் வேகமாக சென்றபோது டயர் வெடித்ததால் தடுப்பு கம்பியில் மோதிய கார், சாலையில் கவிழ்ந்தது. இதில் தந்தை-மகன் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பூந்தமல்லி,

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 38). இவர், தன்னுடைய 8 வயது மகன் அத்வைக் உடன் நேற்று மதியம் கே.கே.நகரில் இருந்து திருப்பத்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையில் கார் வேகமாக சென்றபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ராஜேஷின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் உள்ள இரும்பு தடுப்பு கம்பியில் மோதி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதியும், வலதுபுற கதவும் நொறுங்கியது.

தந்தை-மகன் உயிர் தப்பினர்

இதை கண்ட அங்கிருந்த போக்குவரத்து போலீசார், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த காரை மீட்டனர். இதில் காரை ஓட்டி வந்த ராஜேஷ் லேசான காயத்துடனும், அவருடைய மகன் அத்வைக் காயம் ஏதுமின்றியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ராஜேஷ், பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று முழுஊரடங்கு என்பதால் சாலையில் கார் கவிழ்ந்த நேரத்தில் அந்த வழியாக பின்னால் எந்த வாகனங்களும் வரவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story