‘ஒமைக்ரான் தொற்றில் இருந்து பாதுகாக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே’ அமைச்சர் உறுதி


‘ஒமைக்ரான் தொற்றில் இருந்து பாதுகாக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே’ அமைச்சர் உறுதி
x
தினத்தந்தி 17 Jan 2022 12:32 AM GMT (Updated: 17 Jan 2022 12:32 AM GMT)

வருகிற 22-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. ஒமைக்ரான் தொற்றில் இருந்து நம்மை முழுமையாக பாதுகாத்து கொள்ளும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள கொரோனா பாதுகாப்பு சிகிச்சை மையத்தில் கூடுதலாக 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனை நேற்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரும் 179 கொரோனா நோயாளிகளிடம் உடல் நலம், சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர்கள் மணிஷ், சிம்ரன் ஜித் சிங் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

8,912 ேபர் மட்டுமே...

தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்காக 1 லட்சத்து 91 ஆயிரத்து 902 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. ஆனால் அதில் இதுவரை 8,912 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 37 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார்கள்.

நோய் தொற்று கண்டறியப்பட்டதும் டாக்டர் ஆலோசனையை பெற்று தனிமைப்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 950 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம், தண்டையார்பேட்டை தொற்று நோய் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா பாதுகாப்பு மையம் உள்ளது. 2 ஆயிரம் படுக்கைகளுடன் அத்திப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தங்க வைக்கப்பட உள்ளது.

ஒரே ஆயுதம் தடுப்பூசி

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரசு அலுவலர்கள், போலீசார், முன்கள பணியாளர்களுக்கு 350 படுக்கைகளும், போலீஸ் ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகளும் அமைக்கப்பட்டு உள்ளது. டாக்டர்கள், செவிலியர்களுக்கு அயனாவரம் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள 350 படுக்கைகளில் 100 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. 2 தடுப்பூசி போடாதவர்கள்தான் கொரோனாவால் இறந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தடுப்பூசி போட்டவர்கள் இறப்பின் விளிம்புக்்கு போவதில்லை. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்வதும், ஒமைக்ரான் போன்ற புதிய தொற்றில் இருந்து நம்மை முழுமையாக பாதுகாத்து கொள்ளும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

தடுப்பூசி முகாம்

வருகிற சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில் 19-வது தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது. தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் 15 முதல் 18 வயது வரை உள்ள 33 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடவேண்டும். அதில் இதுவரை 25 லட்சத்து 21 ஆயிரத்து 61 பேருக்கு போடப்பட்டு உள்ளது. இது 75 சதவீதம் ஆகும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரிசோதனை அதிகமாக செய்யப்படுகிறது. தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளதாலும், பண்டிகை காலம் என்பதாலும் பரிசோதனை அதிகமாக எடுக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு பயன் தரும். தமிழகத்தில் டெல்டாவால் பாதிக்கப்பட்டவர்கள்தான் இறந்து உள்ளனர். ஒமைக்ரான் பாதிப்பால் இதுவரையிலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story