தினத்தந்தி புகார் பெட்டி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 17 Jan 2022 4:38 PM GMT (Updated: 17 Jan 2022 4:38 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் விளாப்பட்டி 2-வது வார்டு சமாதானபுரம் விநாயகர் கோவில் அருகே குடிநீர் தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் சரிவர இயங்காமல் கடந்த ஓராண்டாக காட்சி பொருளாக கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மோட்டாரை சரிசெய்து குடிநீர் கிடைக்க வழி செய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், இலுப்பூர், புதுக்கோட்டை

தேங்கி நிற்கும் கழிவுநீர்
பெரம்பலூர் நகராட்சி பகுதியில் ஒரு சில இடங்களில் பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாக தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெரம்பலூர்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட மேலக்குணங்குடி கிராமத்தில் இருந்து அரசடிகாடு செல்லும் பாதையில்  நல்லியான் குளம் உள்ளது. 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குளத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் நீர்மட்டம் குறைந்து கிணறுகள், குளங்கள் நிரம்பாமல் உள்ளது. இதனால் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மேலக்குணங்குடி, பெரம்பலூர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட கொடிக்கரம்பை சாலையில் சாலையின் இருபுறமும் குப்பைகள் அதிக அளவில் கிடக்கிறது. தற்போது குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பகுதியில்  வீடுகளில் உள்ள குப்பைகளை வாளியில்  அள்ளி சாலையின் ஓரத்தில் பொதுமக்கள் வைக்கின்றனர். ஆனால் துப்புரவு பணியாளர்கள் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் வந்து குப்பைகளை அள்ளி செல்கின்றனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் ஓரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளவும், தினந்தோறும் வாளியில் அள்ளிவைக்கும் குப்பைகளை  எடுத்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கீரமங்கலம், புதுக்கோட்டை.

நாய்கள் தொல்லை
புதுக்கோட்டை நகராட்சி ராஜகோபாலபுரம், பெரியார்நகர், புதிய பஸ்நிலையம், நிஜாம் காலனி ஆகிய பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் இரவு நேரங்களில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களை பின்னால் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும் இரவு நேரங்களில் ஒன்றாக கூடி நின்று ஊலையிட்டும், சண்டையும் போட்டு கொள்கிறது. இந்த சத்தத்தால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் தூக்கம் இல்லாமல் அவதி அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நாய்களை பிடித்து செல்ல வேண்டும். 
பொதுமக்கள், புதுக்கோட்டை.

பெயர் பலகையை சரிசெய்ய கோரிக்கை 
 திருச்சி சிங்கார தோப்பு அருகே  இப்ராஹிம் பூங்கா உள்ளது. இங்கு தினமும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பொழுதை கழித்து வருகின்றனர்.  இந்த பூங்காவின் நுழைவுவாயில் பெயர்பலகையில்  பூங்கா என்ற வார்த்தையில் கா என்ற வார்த்தை உடைந்து விழுந்து  தவறாக உள்ளது. எனவே பெயர் பலகையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
திருவேங்கடம், மேலத்தெரு, திருச்சி.

பாம்புகளால் பொதுமக்கள் அச்சம்
திருச்சி மாவட்டம் நாகநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து இறங்கி நாகநல்லூர், சூக்லாம்பட்டி, மலையாள காலனி, முத்தையா பாளையம் ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் பலர் நடந்து செல்கின்றனர். இந்தநிலையில் அப்பகுதி சாலையில் ஏராளமான பாம்புகள் சுற்றித்திரிகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நாகநல்லூர், திருச்சி.

Next Story