மாடுகளுடன் இளைஞர்கள் சாலை மறியல்


மாடுகளுடன் இளைஞர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Jan 2022 4:39 PM GMT (Updated: 17 Jan 2022 4:39 PM GMT)

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தக்கோரி மாடுகளுடன் இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அருகே குதிரைச்சந்தல்,வடக்கநந்தல், பரிகம், மாத்தூர்,மண்மலை, எடுத்தவாய்நத்தம், அக்கராயபாளையம் உள்பட பல்வேறு கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முடிந்து காணும் பொங்கல் அன்று மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால்  நேற்று முன்தினம் முழு ஊரடங்கு என்பதால் இந்தாண்டு காணும் பொங்கல் அன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. 
அதற்கு பதில் நேற்று நடத்த பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்த போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மாட்டுடன் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதான படுத்தினர்.

முற்றுகை

 இதையடுத்து அங்கு மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர். இதேபோல் அக்கராயப்பாளையம் பகுதியில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் தலைமையிலான போலீசார், நிகழ்ச்சிக்கான நேரம் முடிந்துவிட்டது  எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இதனால்  போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இளைஞர்கள் மாட்டுடன் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 வடக்கநந்தல் கிராமத்தில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடக்கக்கூடாது என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் இளைஞர்கள் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தாலும் கச்சிராயப்பாளையம் பகுதியில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர். இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். இது தவிர கபடி, கோ கோ, வாலிபர் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Next Story