இன்று நடைபெற இருந்த ஆற்றுத்திருவிழாவுக்கு தடை


இன்று நடைபெற இருந்த ஆற்றுத்திருவிழாவுக்கு தடை
x
தினத்தந்தி 17 Jan 2022 4:55 PM GMT (Updated: 17 Jan 2022 4:55 PM GMT)

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த ஆற்றுத்திருவிழாவுக்கு தடை விதித்து கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளான பிடாகம், குச்சிப்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டு, கண்டாச்சிபுரம் தாலுகா அரகண்டநல்லூர், மணம்பூண்டி, ஏனாதிமங்கலம், பையூர், பேரங்கியூர் ஆகிய இடங்களிலும் மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 5-ம் நாள் நடைபெறும் ஆற்றுத்திருவிழாவில் அதிகளவில் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி அரசின் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி திருவிழா கூட்டங்கள், பெரிய அளவிலான கூட்டங்கள் மற்றும் சிலை ஊர்வலங்கள் அனுமதிக்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. அதோடு திறந்தவெளி இடங்களில் நடைபெறும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அந்த இடத்தின் மொத்த பரப்பளவில் 50 சதவீத நபர்கள் மட்டும் உரிய சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொள்ளலாம் என்றும் அதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை

அதன்படி ஆற்றுத்திருவிழா இடங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் எதுவும் வரையறுக்க இயலாது என்பதாலும், அதிகளவிலான பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடும்போது உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க இயலாது என்பதாலும் தற்போது பரவி வரும் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டும் பொதுமக்கள், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆற்று கரையோரப்பகுதிகளிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாக இருந்த ஆற்றுத்திருவிழாவுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவல் விழுப்புரம் மாவட்ட  கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை தென்பெண்ணையாறு, கச்சிராயப்பாளையம் கோமுகி ஆறு மற்றும் இதர ஆற்றங்கரையோரப்பகுதிகளில்  இன்று நடைபெறவுள்ள ஆற்றுத்திருவிழாவில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா நடத்த தடைவிதிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story