கே.ராயபுரத்தில் மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்


கே.ராயபுரத்தில் மஞ்சுவிரட்டு:  காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்
x
தினத்தந்தி 17 Jan 2022 5:51 PM GMT (Updated: 17 Jan 2022 5:51 PM GMT)

கே.ராயபுரத்தில் நடை பெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர்.

அரிமளம்:
மஞ்சுவிரட்டு
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிக அளவில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி தமிழக அரசின் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கே.ராயபுரம் கிராமத்தில் ஸ்ரீ அபிமானம் காத்த அய்யனார் கோவில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நொண்டி அய்யா கோவில் திடலில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. 
20 பேர் காயம்
இந்த மஞ்சுவிரட்டு விழாவை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, அறந்தாங்கி, புதுவயல், கே.புதுப்பட்டி, அரிமளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி ஆகியோர் முன்னிலையில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. 
 இதில் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு போட்டிப்போட்டு அடக்கினர். இந்த மஞ்சுவிரட்டில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு ரசித்தனர். மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 20 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக காரைக்குடி, கே.புதுப்பட்டி, அறந்தாங்கி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Next Story