தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 17 Jan 2022 6:22 PM GMT (Updated: 17 Jan 2022 6:22 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெயர் பலகையை சரிசெய்ய கோரிக்கை 
 திருச்சி சிங்கார தோப்பு அருகே  இப்ராஹிம் பூங்கா உள்ளது. இங்கு தினமும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பொழுதை கழித்து வருகின்றனர்.  இந்த பூங்காவின் நுழைவுவாயில் பெயர்பலகையில்  பூங்கா என்ற வார்த்தையில் கா என்ற வார்த்தை உடைந்து விழுந்து  தவறாக உள்ளது. எனவே பெயர் பலகையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
திருவேங்கடம், திருச்சி.

பாம்புகளால் பொதுமக்கள் அச்சம்
திருச்சி மாவட்டம் நாகநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து இறங்கி நாகநல்லூர், சூக்லாம்பட்டி, மலையாள காலனி, முத்தையா பாளையம் ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் பலர் நடந்து செல்கின்றனர். இந்தநிலையில் அப்பகுதி சாலையில் ஏராளமான பாம்புகள் சுற்றித்திரிகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நாகநல்லூர், திருச்சி.

குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருச்சி மாநகராட்சி வயலூர் ரோடு வாசன் நகர் 7-வது குறுக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் சேகரிப்படும் குப்பைகளை ஒரு இடத்தில் மலைப்போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை கால்நடைகள் கிளறி வருகிறது. மேலும், குப்பைகளால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை கொட்டுவதற்கு அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.

மயானத்திற்கு செல்ல சாலை வசதி வேண்டும்
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா எசனைக்கோரை  கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால் உடலை அடக்கம் செய்ய மயானம் வெகுதொலைவில் உள்ளது. தற்போது அந்த மயானம் பழுதடைந்து மிகவும் மோசமாக உள்ளது. மேலும் அங்கு செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லை. ஒற்றையடி பாதையாகவே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த வழியாக யாரும் செல்ல முடியாது. எனவே மயானத்திற்கு செல்ல சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள் , எசனைக்கோரை, திருச்சி. 

பூட்டி கிடக்கும் கழிவறைகள்
திருச்சி மாவட்டம்,  துறையூர் வட்டம்,  சிங்களாந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கியூர் கிராமத்தில்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாகசுமார்  ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில்  கடந்த ஒராண்டுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கழிவறைகள் கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை கழிவறைகள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே பூட்டி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறைகளை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், துறையூர், திருச்சி.

Next Story