தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Jan 2022 8:19 PM GMT (Updated: 17 Jan 2022 8:19 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

விபத்து அபாயம்
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் இருந்து மணியடிச்சான் கோவில் செல்லும் அவ்வை சண்முகம் சாலையில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டால் பழுது நீக்குவதற்காக ஆங்காங்கே மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று சாலையின் மட்டத்தை விட உயரமாக வேகத்தடை போன்று காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி உயிரிழப்பு நேரிடும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை சீரமைத்து விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண், கோட்டார்.
எரியாத விளக்குகள்
தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட அழகியபாண்டியபுரம் கீழ கேசவன்புதூர் பகுதியில் பல நாட்களாக தெருவிளக்குகள் எரியாமலும், 5 மின் கம்பங்கள் சேதமடைந்து முறிந்து விழும் நிலையிலும் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் இரவு நேரம் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்குகளை அகற்றி புதிய விளக்குகளை அமைக்கவும், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.டி.ராஜ், கீழகேவசன்புதூர்.
வீணாகும் குடிநீர்
திருநெல்வேலி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட வீரமார்த்தாண்டன் புதூர் (குமரன்புதூர் விலக்கு) உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-த.விஜேஷ், விசுவாசபுரம்.
குளம் தூர்வாரப்படுமா?
 இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆழ்வார்கோவில் பள்ளிவிளையில் விளாத்திகுளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயம் உள்ளிட்ட ேதவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். குளத்தை முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-மதீஷ் நாகமணி, பள்ளிவிளை.
மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
அடைக்காக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட பாத்திமாநகர் உள்ளது. இந்த பகுதியில் ஒரு வீட்டின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே வசித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரிஜி, அடைக்காக்குழி.
வழிகாட்டு பலகை சீரமைக்கப்படுமா?
நாகர்கோவிலில் வடசேரி அண்ணாசிலை சந்திப்பு முக்கிய பகுதியாகும். இந்த சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகை சேதமடைந்து கீழே விழுந்துள்ளது. பல மாதங்களாகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, வழிகாட்டு பலகையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                             -வேலாயுத பெருமாள், வடிவீஸ்வரம்.

Next Story