தாம்பரம் சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்


தாம்பரம் சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
x
தினத்தந்தி 18 Jan 2022 12:44 AM GMT (Updated: 2022-01-18T06:14:31+05:30)

தாம்பரம் சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பரணிதரன், சித்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மீனாகுமாரி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனர் டாக்டர் கணேஷ், சித்த மருத்துவமனை டாக்டர்கள் சி.ஜே.கிரிஸ்டியன். மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

சுனாமி வேகத்தில் பரவுகிறது

கொரோனா முதல் மற்றும் 2-வது அலையின்போது சித்த மருத்துவத்தின் பயன் பெரிய அளவில் இருந்தது. 2-வது அலையின்போது 77 இடங்களில் அமைக்கப்பட்ட கொரோனா சித்த மருத்துவ மையத்தில் 68 ஆயிரம் பேர் பயனடைந்தனர். தற்போது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களில் 1,591 சித்த மருத்துவ சிகிச்சைக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் சொன்னதுபோல் டெல்டாவும், ஒமைக்ரானும் சேர்ந்து சுனாமி வேகத்தில் உலகம் முழுவதிலும் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தினசரி கொரோனா பரவல் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது. அது நேற்று முன்தினம் சற்று குறைந்தது.

அதிகரிக்க வாய்ப்பு

எனினும் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக கொரோனா பரவல் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் கிராமப்புறத்தில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள் யாருக்காவது ஒருவருக்கு இருந்தால் கூட அது கிராமங்களில் பரவும் நிலை ஏற்பட்டிருக்கும். இன்னும் 3 நாட்களில் அது தெரியவரும்.

ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 9 கோடியே 10 லட்சத்து 26 ஆயிரத்து 483 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தற்போது 75 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. முன்களப்பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ள வேண்டும். நெல்லை, தென்காசி மாவட்டங்களில்தான் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பின்தங்கி உள்ளது. விரைவில் அங்கு ஆய்வு செய்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story