2 சகோதரிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு ஆயுள் தண்டனையாக குறைப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 18 Jan 2022 2:42 PM GMT (Updated: 2022-01-18T20:12:31+05:30)

14 குழந்தைகளை கடத்தி அதில் 5 குழந்தைகளை கொன்ற சகோதரிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

மும்பை, 

14 குழந்தைகளை கடத்தி அதில் 5 குழந்தைகளை கொன்ற சகோதரிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. 

தூக்கு தண்டனை

கோலாப்பூரை சேர்ந்த சகோதரிகள் ரேணுகா, சீமா. இவர்கள் 14 குழந்தைகளை கடத்தி உள்ளனர். இதில் 5 குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்தனர். இந்த சம்பவங்கள் 1990 முதல் 1996-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நடந்தன. இது தொடர்பாக போலீசார் சகோதரிகள் 2 பேரையும் கைது செய்தனர். 

இது தொடர்பாக கோலாப்பூர் கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, அவர்கள் மீதான குற்றம் நிரூபணம் ஆனது. இதனால் 2001-ம் ஆண்டு இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து கோலாப்பூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதை கடந்த 2004-ம் ஆண்டு மும்பை ஐகோர்ட்டும், 2006-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. 

இதையடுத்து தூக்கு தண்டனை கைதிகளான சகோதரிகள் 2 பேரும் கவர்னரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனு 2012-13-ம் ஆண்டுகளில் நிராகரிக்கப்பட்டன. 2014-ம் ஆண்டு ஜனாதிபதியும் கருணை மனுக்களை நிராகரித்தார். 

ஐகோர்ட்டில் மனு

இந்தநிலையில் குற்றவாளிகளான சகோதரிகள் 2 பேரும் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், தங்களது தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், ஏற்கனவே 25 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து விட்டதால், சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

 ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனையை உறுதி செய்ததை அடுத்து, இதுநாள் வரை தாங்கள் மரண பயத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்து இருந்தனர். 

ஆயுள் தண்டனையாக குறைப்பு 

இந்த மனுவை நீதிபதிகள் நிதின் ஜாம்தார், கோட்வால் ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணை நிறைவை தொடர்ந்து குற்றவாளிகளான ரேணுகா, சீமா ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். 

கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிய போதிலும், தூக்கு தண்டனையை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தியதோடு, அரசு நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு இருப்பதே, தண்டனை குறைப்புக்கு காரணம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

தண்டனை குறைக்கப்பட்டபோதிலும், அவர்கள் செய்த குற்றம் கொடூரமானது என்பதால் இருவரையும் சிறையில் இருந்து விடுவிக்க கோர்ட்டு மறுத்து விட்டது. இதனால் வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையை சிறையில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
------------------


Next Story