ஆற்றுத்திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடிய தென்பெண்ணையாறு


ஆற்றுத்திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடிய தென்பெண்ணையாறு
x
தினத்தந்தி 18 Jan 2022 4:08 PM GMT (Updated: 18 Jan 2022 4:08 PM GMT)

கொரோனா- ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் ஆற்றுத்திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டதால் தென்பெண்ணையாறு வெறிச்சோடி காணப்பட்டது. தடையை மீறி வந்த மக்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

விழுப்புரம், 

தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள 6 மாதங்கள் பகல் பொழுதாகவும் (உத்திராயண புண்ணியகாலம்), ஆடி முதல் மார்கழி மாதம் வரை உள்ள 6 மாதங்கள் இரவாகவும் (தட்சிணாயண புண்ணியகாலம்) இருக்கும் என்பது ஐதீகம். உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க நாளான தை முதல் நாளில் இருந்து 5-வது நாளில் ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இவ்விழாவின்போது சுற்றுவட்டார கிராமப்புற கோவில்களில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு ஆற்றுத்திருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதோடு சாமிகளுக்கு நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியிலும் பங்கேற்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்வார்கள்.

தடை

இத்தகைய சிறப்புமிக்க ஆற்றுத்திருவிழாவானது இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்து 5-வது நாளான நேற்று நடைபெறுவதாக இருந்தது. இவ்விழாவை கொண்டாட மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தயாராகினர். அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டு வந்த தென்பெண்ணையாற்றில் தற்போது வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியதால் ஆற்றில் தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஆற்றுத்திருவிழா களைகட்டும் என்று பொதுமக்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர்.
இந்த சூழ்நிலையில்  இந்த ஆண்டும் உருமாறிய கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில்ஆற்றுத்திருவிழாவிற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதோடு அந்தந்த கோவில்களிலேயே சாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியை நடத்துமாறும் அறிவுறுத்தியது.

பொதுமக்களை திருப்பி அனுப்பினர்

இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள தென்பெண்ணையாற்றின் பகுதிகளில் நேற்று நடப்பதாக இருந்த ஆற்றுத்திருவிழா ரத்து செய்யப்பட்டது.  மேலும் தடையை மீறி ஆற்றுக்கு பொதுமக்கள் வராமல் இருக்கும் வகையில் ஆற்றின் பிரதான இடங்களில் போலீசார், பேரிகார்டு, சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தடையையும் மீறி பொதுமக்கள் பலர், ஆற்றில் குளிக்க வந்தனர். அவர்களை ஆற்றுக்குள் செல்லாதவாறு போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும் சின்னக்கள்ளிப்பட்டு, பேரங்கியூர், பிடாகம், எல்லீஸ்சத்திரம், மரகதபுரம், திருப்பச்சாவடிமேடு, அத்தியூர்திருவாதி, ஏனாதிமங்கலம், பையூர், அரகண்டநல்லூர், மணம்பூண்டி உள்ளிட்ட தென்பெண்ணையாற்று பகுதிகள் நேற்று மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அந்தந்த கோவில்களில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

பொதுமக்கள் ஏமாற்றம்

 ஆற்றுத்திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டதால் விழுப்புரம் மாவட்ட மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யமுடியாமல் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது தவிர ஆற்றுப்பகுதிகளில் மக்கள் வருகை புரிவார்கள் என்று எண்ணி ஆற்றங்கரை ஓரங்களில் ராட்டினம், ஊஞ்சல் போன்ற சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு உபகரணங்களை அமைக்க தயார் நிலையில் இருந்த அந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆற்றுத்திருவிழா என்பது காலம், காலமாக நடந்து வருகிறது. கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து ஆற்றுத்திருவிழாவில் சாமிகளுக்கு தீர்த்தவாரி செய்யும் நிகழ்ச்சியை நடத்த மட்டுமாவது அனுமதித்திருக்க வேண்டும் என்றனர்.

Next Story