மின்மயமான ரெயில் பாதையில் விரைவில் ஆய்வு


மின்மயமான ரெயில் பாதையில் விரைவில் ஆய்வு
x
தினத்தந்தி 18 Jan 2022 4:16 PM GMT (Updated: 18 Jan 2022 4:16 PM GMT)

மானாமதுரை-ராமநாதபுரம் இடையே ரெயில்பாதையை மின்மயமாக்கும் திட்ட பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடந்துள்ள நிலையில் விரைவில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளார்.

ராமநாதபுரம், 
மானாமதுரை-ராமநாதபுரம் இடையே ரெயில்பாதையை மின்மயமாக்கும் திட்ட பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடந்துள்ள நிலையில் விரைவில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளார்.
அனுமதி
நாடு முழுவதும் உள்ள ரெயில் பாதையை மின்மயம் ஆக்குவதை தங்களின் கனவுத்திட்டமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன்படி அனைத்து ரெயில்பாதைகளையும் மின்ரெயில் பாதைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து வழித்தடங்களையும் மின்மயமாக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 
குறிப்பாக மதுரை - ராமேசுவரம் இடையேயான 161 கிலோ மீட்டர் ரெயில்பாதை மின்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக மதுரை - மானாமதுரை இடையே 47 கிலோ மீட்டர் ரெயில் பாதையை கடந்த ஆண்டு முழுமையாக மின்பாதையாக மாற்றி முடிக்கப்பட்டு உள்ளது. 
இதன் தொடர்ச்சியாக மானாமதுரை - மண்டபம் இடையே யான 96 கிலோ மீட்டர் தூரத்திலான ரெயில்பாதை மின்பாதையாக மாற்றும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. 9.5 மீட்டர் உயரம் முதல் 10.6 மீட்டர் உயரத்திலான மின்கம்பங்கள் அமைத்து மின்கேபிள்கள் பதிக்கும் பணி முடிவடைந்து உள்ளது. 
ஆய்வு
ராமநாதபுரம் ரெயில் நிலைய பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதிர்வுகளை தாங்கும் வகையிலான தண்டவாளங்கள் மாற்றப்பட்டு உள்ளன. மானாமதுரை முதல் ராமநாதபுரம் வரையிலான இந்த பணியில் 18 மீட்டர் இடைவெளியில் மொத்தம் 257 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மானாமதுரை - ராமநாதபுரம் வரையிலான பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.
இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்று உறுதி செய்யப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்துள்ளதை தொடர்ந்து விரைவில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மானாமதுரை-ராமேசுவரம் மின்ரெயில்பாதையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 
மாற்றுப்பாதை
அவர் பார்வையிட்டு அனுமதி அளித்துவிட்டால் ராமநாதபுரம் வரும் அனைத்து ரெயில்களும் மின்வழி பாதையில் வந்து செல்லும். அதாவது ராமநாதபுரம் வரும் வரை மின்வழிபாதை என்ஜினிலும், ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு டீசலில் செல்லும் வகையிலும் மல்டி என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் முதல் மண்டபம் வரையிலான பாதை மின்மயமாக்கும் பணி உச்சிப்புளி அருகே ரெயில்வே மாற்றுப்பாதை திட்டம் முடிந்ததும் செயல்படுத்தப்படுமா அல்லது அதற்கு முன்ன தாகவே நடைபெறுமா என்று விரைவில் முடிவு செய்யப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story