கூரியரில் ஐபோன் அனுப்புவதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி


கூரியரில் ஐபோன் அனுப்புவதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 18 Jan 2022 4:22 PM GMT (Updated: 2022-01-18T21:52:12+05:30)

இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபரிடம் நட்பாக பழகி கூரியரில் ஐபோன் அனுப்புவதாக கூறி ரூ.3¼ லட்சத்தை மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரை அடுத்த கன்னலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் சிவப்பிரகாஷ் (வயது 24). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பெண் ஒருவர் அறிமுகமானார். அந்த பெண், தான் அமெரிக்காவில் இருப்பதாக கூறி சிவப்பிரகாசிடம் நட்பாக பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிவப்பிரகாசை தொடர்பு கொண்டு பேசிய அந்த பெண், அமெரிக்காவில் இருந்து அவருக்கு புதிய வகை ஐபோன் கூரியர் மூலம் அனுப்பி வைப்பதாக கூறினார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து சிவப்பிரகாசின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய ஒரு நபர், தான் டெல்லி கஸ்டம்ஸ் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அதை பெற கூரியர் கட்டணம், வரி மற்றும் போலீஸ் சான்றிதழ் பெற பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரூ.3¼ லட்சம் மோசடி

இதனை நம்பிய சிவப்பிரகாஷ், தனது வங்கி கணக்கில் இருந்து 3 தவணைகளாக அந்த நபர் சொன்ன வங்கி கணக்கிற்கு ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 500-ஐ அனுப்பி வைத்தார். ஆனால் வெகு நாட்கள் கழித்தும் பார்சல் எதுவும் சிவப்பிரகாசுக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிவப்பிரகாஷ், அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதன் பின்னரே இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகி வந்த பெண்ணும், கஸ்டம்ஸ் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறிய நபரும் சேர்ந்து மோசடி செய்தது சிவப்பிரகாசுக்கு தெரியவந்தது. இதுபற்றி அவர் , விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரகாசிடம் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பேசி பழகிய பெண் மற்றும் பணத்தை பெற்ற மர்ம நபர் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story