தெற்கு குடியிருப்பு கிராமத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு 3 வீரர்கள் காயம்


தெற்கு குடியிருப்பு கிராமத்தில்  வடமாடு ஜல்லிக்கட்டு 3 வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 18 Jan 2022 5:03 PM GMT (Updated: 18 Jan 2022 5:03 PM GMT)

தெற்கு குடியிருப்பு கிராமத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 3 வீரர்கள் காயமடைந்தனர்.

அரிமளம்:
வடமாடு ஜல்லிக்கட்டு 
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கீழப்பனையூர் ஊராட்சி தெற்கு குடியிருப்பு கிராமத்தில் புனித அடைக்கல மாதா ஆலய அந்தோணியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் படி வடமாடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. வடமாடு ஜல்லிக்கட்டை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். 
11 காளைகள் கலந்து கொண்டன
வடமாடு ஜல்லிக்கட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 11 காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளைகளையும் அடக்குவதற்கு 25 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டது. காளைகளை அடக்க ஒரு குழுவிற்கு 9 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த வடமாடு ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தண்டாயுதபாணி தலைமையில், திருமயம் தாசில்தார் பிரவீனா மேரி, பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
காளைகளை அடக்குவதற்கு மாடுபிடி வீரர்கள் முயன்றனர். ஆனால் என்னைத் தொட்டுப் பார் என மாடுகள் ஆக்ரோஷத்துடன் வீரர்களை நோக்கி பாய்ந்து முட்டித் தள்ள முயன்று பயமுறுத்தியது. இந்த வடமாடு ஜல்லிக்கட்டில் 8 மாடுகளை வீரர்கள் அடக்கினார்கள். 3 மாடுகள் வீரர்களின் கையில் அகப்படாமல் தன்னுடைய உரிமையாளர்களுக்கு பரிசுகளை பெற்று தந்தது. விழா குழுவின் சார்பில் ரூ.5 ஆயிரம் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டது. 
பரிசுகள் 
வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயம் மற்றும் தலா ரூ.1,000 வழங்கப்பட்டது. கிராமத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டு மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கிராமத்தின் சார்பில் பரிசுகளை வழங்கினார். 
இதில் திரளான சுற்றுவட்டார கிராமமக்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனர். இந்த வடமாடு ஜல்லிக்கட்டில் 3 வீரர்கள் சிறிய காயம் அடைந்தனர். வடமாடு ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீசார் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தெற்கு குடியிருப்பு ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Next Story