தளி அருகே கம்பி வேலியில் சிக்கி படுகாயமடைந்த குட்டியானை-டிரோன் கேமரா மூலம் தேடும் பணி தீவிரம்


தளி அருகே கம்பி வேலியில் சிக்கி படுகாயமடைந்த குட்டியானை-டிரோன் கேமரா மூலம் தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 Jan 2022 5:04 PM GMT (Updated: 2022-01-18T22:34:51+05:30)

தளி அருகே கம்பி வேலியில் சிக்கி படுகாயமடைந்த குட்டியானையை வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை:
2 வயது குட்டியானை
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கூட்டத்தில் இருந்து 2 வயதான குட்டியானை பிரிந்து, வனப்பகுதியில் சுற்றி வருகிறது. இந்தநிலையில் நேற்று அந்த குட்டியானை ஜவளகிரி வனப்பகுதியையொட்டி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் சிக்கியது. 
அதில் இருந்து மீள முயன்ற குட்டியானைக்கு துதிக்கை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த வனத்துறையினர் அதை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அங்கிருந்து குட்டியானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
டிரோன் கேமரா
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி குட்டியானையை மீட்டு சிகிச்சை அளிக்க வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வனச்சரகர்கள் சுகுமார், முருகேசன், ரவி, வனத்துறை டாக்டர் பிரகாஷ் ஆகியோர் ஜவளகிரி வனப்பகுதி சென்று குட்டியானையை தேடும்பணியில் ஈடுபட்டனர்.
குட்டியானை சென்ற பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால் அதனை டிரோன் கேமரா மூலமும் தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story