கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி எருதுவிடும் விழா நடத்த வேண்டும்-விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல் அறிவுரை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி எருதுவிடும் விழா நடத்த வேண்டும்-விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல் அறிவுரை
x
தினத்தந்தி 18 Jan 2022 5:04 PM GMT (Updated: 18 Jan 2022 5:04 PM GMT)

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருதுவிடும் விழாவை நடத்த வேண்டும் என்று விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல் அறிவுரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி:
ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஜல்லிக்கட்டு, எருதுவிடும் விழா நடத்துவது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் இந்திய விலங்குகள் நலவாரிய மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல் கலந்து கொண்டு பேசியதாவது:-
எருது விடும் விழா 
எருது விடும் விழாவில் உள்ளூர் மாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் எருதுகளுக்கு என்று தனியாக நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது. 3.30 மணி நேரம் மட்டுமே விழா நடத்த அனுமதி வழங்கப்படும். எருது ஓட்டம் 125 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே நடத்த வேண்டும். எருதுகள் ஓடுமிடத்திற்கு இருபக்கத்திலும் இரட்டை அடுக்கு தடுப்பு அரண் அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு பக்கத்திலும் இரு தடுப்பு அரண்களுக்கு இடையில் 2 அடி இடைவெளி இருக்க வேண்டும். எத்தனை காளைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது என்பதை விழா பொறுப்பாளர்களிடமிருந்து எழுத்து பூர்வமாக பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும்பட்சத்தில் போட்டி உடனடியாக நிறுத்தப்படும்.
108 ஆம்புலன்சுகள் 
மேலும், போட்டி நடைபெறும் இடங்களில் குறைந்தபட்சம் இரண்டு 108 ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட வேண்டும். போட்டி நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வட்ட, மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஓர் மருத்துவக்குழு பணியில் இருக்க வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட எந்தவித பணம், பரிசு பொருளும் வழங்கக்கூடாது. காளைகளுக்கு தண்ணீர், பூசா, புல் ஆகியவற்றை விழாக்குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும். எருது விடும் நிகழ்ச்சிகளை முழுமையாக காப்பீடு செய்ய வேண்டும். இந்நிகழ்ச்சியினை முழுமையாக வீடியோ பதிவு செய்து, அதன் நகல் ஒன்றினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தடுப்பூசி சான்றிதழ்
மேலும், காளையுடன் வரும் உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், போட்டி நடப்பதற்கு 2 நாட்கள் முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும். அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றியே விழாவை நடத்த வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தமிழக விலங்குகள் நலவாரிய உறுப்பினர்கள் ஐயூப்கான், ஷோபா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி கலெக்டர்கள் சதீஷ்குமார், தேன்மொழி, கால்நடை துணை இயக்குனர் மரியசுந்தர், உதவி இயக்குனர் முரளிசதானந்தம் மற்றும் எருதுவிடும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story