தைப்பூசத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


தைப்பூசத்தையொட்டி  ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 18 Jan 2022 5:25 PM GMT (Updated: 18 Jan 2022 5:25 PM GMT)

தைப்பூசத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தைப்பூசத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
கோபி
தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் தைப்பூச விழா நடைபெற்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் முருகன் ேகாவில்களில் தைப்பூச விழா நடந்தது. இதையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. 
கோபியில் தைப்பூச திருவிழாவையொட்டி பச்சைமலை சுப்ரமணிய சாமி கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், கோபி சுப்ரமணியசாமி கோவில் ஆகிய முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு  வந்த பக்தர்கள் சாமி கும்பிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 
கோபி டவுன் மாதேசியப்பன் வீதியில் உள்ள மாதேஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. அப்போது முருகனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோபி வடக்கு வீதியில் உள்ள பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோவிலில் முருகனுக்கு தைப்பூசத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர். 
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே கொண்டையம்பாளையத்தில் பழமை வாய்ந்த பொன்மலை ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தேரோட்ட விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை 4 மணி அளவில் கோவிலில் சாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 
இதைத்தொடர்ந்து விநாயகர் ஒரு தேரிலும், வள்ளி, தெய்வானையுடன் முருகன் மற்றொரு தேரிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தேர் இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். கொரோனா காரணமாக இந்த ஆண்டு உள்ளூர் பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டு தேரை இழுத்து சென்றனர்.  இதைத்தொடர்ந்து முருகன் தேர் இழுக்கப்பட்டது. முருக பெருமான் தேர் பக்தர்கள் இன்றி பொக்லைன் எந்திரம் மூலம் இழுக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. கொண்டையம்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடந்தது. மாலையில் தேர்கள் நிலையை வந்தடைந்தன. இதையொட்டி கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலின் வாசலில் நின்றபடி சாமியை பக்தர்கள் வழிபட்டு சென்றனர். 
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே பழனிக்கவுண்டன் பாளையத்தில் உள்ள குன்றின் மீது உள்ள முருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடந்தன. அப்போது சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்க படவில்லை. இதேபோல் பாசூர் காந்த மலையில் உள்ள பாலமுருகன் கோவிலிலில் தைப்பூசத்தையொட்டி முருகனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த கோவிலிலும் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 
அந்தியூர்
அந்தியூர் தேர் வீதியில் உள்ள சுப்பிரமணி சாமி கோவிலில் சாமிக்கு நேற்று அதிகாலை 4 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வெளியே இருந்தபடி சாமியை வழிபட்டு சென்றனர்.

Next Story