விராலிமலை அருகே 8 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு


விராலிமலை அருகே  8 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு  ஏற்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Jan 2022 5:26 PM GMT (Updated: 18 Jan 2022 5:26 PM GMT)

விராலிமலை அருகே 8 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விராலிமலை:
வாந்தி-வயிற்றுப்போக்கு 
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா வேலூர் ஊராட்சி அண்ணா நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவரது மகள் மோகனஜோதிக்கு (7) கடந்த 15-ந் தேதியன்று திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மோகனஜோதி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். 
இந்நிலையில் அண்ணா நகரை சேர்ந்த சிறுமியின் தந்தை கார்த்திக், சகோதரர் பாரதி (8), சிட்டம்மாள் (65), மாணிக்கம் (35), அர்ஜூனன் (72), பாலமுருகன் (35), குணா (25), நல்லேந்திரன் (25) உள்ளிட்ட 8 பேருக்கு நேற்று திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து விராலிமலை அரசு மருத்துவமனையில் 3 பேரும் மற்ற 5 பேர் மணப்பாறை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ரத்த மாதிரி சேகரிப்பு 
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட மலேரியா மருத்துவ அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் விராலிமலை அரசு மருத்துவமனை, கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு வீடு, வீடாக சென்று ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்தனர். அதோடு சிறிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
பரபரப்பு 
அண்ணா நகர் அருகே இயங்கி வரும் உணவு பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதில் அமரும் ஈ, கொசு உள்ளிட்டவைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அவர்கள் உண்ணும் உணவில் கலந்திருக்கலாம் என்றும், இதனால் உணவு விஷத் தன்மை அடைந்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story