தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 18 Jan 2022 7:59 PM GMT (Updated: 18 Jan 2022 7:59 PM GMT)

தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் கோவில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை:
தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் கோவில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர்.  

தைப்பூச திருவிழா
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. 10 மணிக்கு குடவறை கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
கொரோனா பரவல் காரணமாக நேற்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி விட்டு கோவில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலர் தாமிரபரணி ஆற்றில் ஆங்காங்கே நின்று சூடம், பத்தி கொளுத்தி, கோபுர தரிசனம் செய்தனர்.

சிறப்பு அபிஷேகம்
இதேபோல் நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி சுவாமிக்கும், சண்முகருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு சிறப்பு கும்ப பூஜை, வேள்வி பூஜையும், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது.
நெல்லை வண்ணார்பேட்டை குட்டத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில், திரிபுராந்தீசுவரர் கோவிலில் உள்ள முருகருக்கும், சண்முகருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. 

நெல்லையப்பர் கோவில்
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத்தையொட்டி சுவாமி- அம்பாளுடன் நெல்லை சந்திப்பு தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். 
கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டு இருப்பதுடன் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் சுவாமி நேற்று தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளவில்லை. நெல்லையப்பர் கோவிலில் உள்ள பொற்றாமரைக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.

தீர்த்தவாரி
இதையொட்டி காலை 10 மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜை, கும்ப பூஜை நடந்தது. 10.30 மணிக்கு நெல்லையப்பர் பாகம்பிரியாள் அம்பாளுடனும், காந்திமதி அம்மன், அகஸ்தியர், குங்கிலிய நாயனார், தாமிரபரணி, சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திர தேவி ஆகியோர் பொற்றாமரை குளம் அருகே எழுந்தருளினர். அங்கு 11 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து 12.05 மணிக்கு அஸ்திரதேவர், அஸ்திர தேவி ஆகியோருக்கு பொற்றாமரை குளத்தில் மேளதாளம் முழங்க தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பக்தர்கள் கோவில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் அன்னதானமாக வழங்கப்பட்டது.

பாதயாத்திரை பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் நெல்லை தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி விட்டு அங்கேயே வேல் நட்டி அதற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். சிலர் தாங்கள் சப்பரம் அலங்காரம் செய்து வந்த வாகனத்தின் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Next Story