கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்


கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 18 Jan 2022 9:08 PM GMT (Updated: 18 Jan 2022 9:08 PM GMT)

கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தாமரைக்குளம்:

சிறப்பு அபிஷேகம்
முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசத்தையொட்டி ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடப்பது வழக்கம். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
அதன்படி ேநற்று தைப்பூசத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்கள் மற்றும் முருகன் சன்னதி உள்ள கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவில்களில் வெளியே நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் ஏமாற்றம்
அரியலூா் அருகே கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறைதீர்க்கும் குமரன் கோவிலில் பக்தர்களின்றி முருகப்பெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் அன்னதானமும் நடைபெறவில்லை. சாமி தரிசனம் செய்ய முடியாததால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள், ‌முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சாமியை தரிசிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
தா.பழூர்
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் தைப்பூச வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் பிரகாரத்தில் வீற்றிருக்கும் வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வில்லேந்தி வேலவர் மலர் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். நிகழ்ச்சிக்கு சைவ பிள்ளைமார் மரபினர் ஏற்பாடு செய்தனர்.
இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் தைப்பூசத்தை முன்னிட்டு சாமி, அம்பாள், முருகப்பெருமானுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகமும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
உடையார்பாளையம்
உடையார்பாளையத்தில் பயறணீஸ்வரர் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக பெரிய ஏரி கீழக்கரையில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பெரிய ஏரியில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து உடையார்பாளையம் கடைவீதி வழியாக சென்று கோவில் சன்னதியை வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து கோவிலில் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
வி.கைகாட்டி
தைப்பூசத்தை முன்னிட்டு வி.கைகாட்டியை அடுத்த அஸ்தினாபுரம் கிரமத்தில் உள்ள 23 அடி உயர முருகப்பெருமான் சன்னதியில் உள்ள முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.

Next Story