தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 Jan 2022 3:04 PM GMT (Updated: 19 Jan 2022 3:04 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மரக்கிளையை அகற்ற வேண்டும்

நெல்லை மாநகராட்சி 26-வது வார்டு ரெட்டியார்பட்டி சாலையில் கனரா வங்கி காலனி 4, 5, 6-வது சாலை செல்லும் திருப்பத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த உயர்கோபுர மின்விளக்கிற்கு அருகில் உள்ள மரக்கிளையால் இடையூறு ஏற்படுகிறது. அந்த உயர்கோபுர மின்விளக்கின் வெளிச்சத்தை மரக்கிளைகள் மறைப்பதால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி மரத்தின் கிளையை அகற்றவோ அல்லது உயர்கோபுர மின்விளக்கை சற்று தள்ளி வைக்கவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சுயம்புலிங்கம், என்.ஜி.ஓ. காலனி.

ஆபத்தான கிணறு

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் வீராசமுத்திரத்தில் இருந்து ஆழ்வார்குறிச்சி செல்லும் சாலையில் வாகைக்குளம் பகுதியில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவு பகுதியில் சாலைையயொட்டி பயன்பாடு இல்லாத பாழடைந்த கிணறு உள்ளது. அந்த கிணற்றின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அதன் அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால், குழந்தைகள் விளையாடும்போது கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும் சாலையோரத்தில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக ஒதுங்கும்போது, கிணற்றில் தவறி விழும் அபாயம் இருக்கிறது. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த கிணற்றை அதிகாரிகள் மூட வேண்டும். அல்லது கிணற்றுக்கு சுற்றுச்சுவர் எழுப்பி பாதுகாப்பு மூடி அமைக்க வேண்டும். 
அம்ஜத், முதலியார்பட்டி.

அடிப்படை வசதி செய்யப்படுமா?

கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரம் பஞ்சாயத்தில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. ரேஷன் கடை இருந்தும் திறக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?
பால்ராஜ், சமத்துவபுரம்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

கீழப்புலியூர் 32-வது வார்டு உச்சிமாகாளி அம்மன் கோவில் 3-வது தெருவில் சாலையோரத்தில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டிச் செல்கிறார்கள். இந்த குப்பைகள் பல நாட்களாக அள்ளப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. ஆகவே குப்பைகளை உடனடியாக அள்ளுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்சிமுத்து, கீழப்புலியூர்.

குண்டும், குழியுமான சாலை

கீழக்கடையம் ரெயில் நிலையம் அருகில் இருந்து கேளையாபிள்ளையூர் ரெயில்வே கேட் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இதனால் இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
திருக்குமரன், கடையம்.

குடிநீர் குழாயில் உடைப்பு

தூத்துக்குடி மாநகராட்சி 3-வது மைல், அரசு மருத்துவக்கல்லூரி, காமராஜர் நகர் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக சாலையில் தண்ணீர் வீணாக தேங்கி கிடக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
மருதபெருமாள், தூத்துக்குடி.

சாலையை சீரமைக்க வேண்டும்

தூத்துக்குடி மாநகராட்சி 2-வது வார்டு ப.மு.தேவர் காலனி 3-வது தெருவில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதேபோல் பிள்ளையார் கோவில் பின்புறம் உள்ள தெருவிலும் சாலைகள் மோசமாக உள்ளது. இதனாலும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். ஆகவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க வேண்டும்.
ஆறுமுகம், தூத்துக்குடி.

தாழ்வாக தொங்கும் மின்ஒயர்கள் 

ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கீழூரில் இருந்து மேலூர் செல்லும் வாய்க்கால் பாதையில் பல மாதங்களாக மின்ஒயர்கள் தாழ்வாக தொங்கிக் கொண்டு இருக்கிறது. ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த மின்ஒயர்களை உடனடியாக சரிசெய்ய வேண்டுகிறேன்.
மாரிலிங்கம், வாழவல்லான்.

சுகாதார கேடு

திருச்செந்தூர் நாழிக்கிணறு செல்லும் பாதையில் தென்புறத்தில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி கிடக்கிறது. அதில் பன்றிகள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதேபோல் திருச்செந்தூர் சன்னதி தெருவில் திருவிழா காலங்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. கழிவுநீரில் நடந்து தான் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் நிலை உள்ளது. இதுெதாடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

Next Story