தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 Jan 2022 3:23 PM GMT (Updated: 19 Jan 2022 3:23 PM GMT)

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

 தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
மயிலாடுதுறை மாவட்டம் செருதியூர் பகுதி மஞ்சள் ஆற்றங்கரை சாலை, வடக்குத்தெருவில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதன் காரணமாக அந்த வழியாக கனரக வாகனங்கள் மற்றும் விவசாய அறுவடை எந்திரங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் அந்த பகுதியை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், செருதியூர்.
 வேகத்தடை வேண்டும்
  நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி வாய்மேடு கடைத்தெருவில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியில் வாகனங்களில் வருபவர்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையைக் கடக்கும் போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி வாகனங்கள் அதிவேகமாக சென்று வருவதால் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குழந்தைகள், பெரியவர்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முத்துக்குமார், தாணிக்கோட்டகம்.
 சுகாதார சீர்கேடு
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் 13-வது வார்டு பகுதி மேல்கொண்டாலி தமிழர் தெருவில் குப்பைத்தொட்டி இல்லை. இதனால் குடியிருப்பு பகுதி அருகே குப்பைகள் தேங்கிக் கிடக்கிறது. மேலும் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் அவ்வப்போது குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், புதிய குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், கூத்தாநல்லூர்.


Next Story