பாலமுருகன் கோவிலில் தைப்பூச விழா


பாலமுருகன் கோவிலில் தைப்பூச விழா
x
தினத்தந்தி 19 Jan 2022 4:33 PM GMT (Updated: 19 Jan 2022 4:33 PM GMT)

பிரம்மதேசம் அருகே பாலமுருகன் கோவிலில் தைப்பூச விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பிரம்மதேசம், 

பிரம்மதேசம் அருகே சிறுவாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 15-ந்தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 
விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று முன்தினம் தைப்பூச விழாவையொட்டி சாமிக்கு  பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து செடல் திருவிழா நடைபெற்றது.

நேர்த்திக்கடன்

 இதில் பக்தர்கள் தங்களது உடம்பில் அலகு குத்தியும், பறக்கும் காவடி எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற தீமிதி திருவிழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story