5 நாட்களுக்கு பின் கோவில்கள் திறப்பு: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்கள்


5 நாட்களுக்கு பின் கோவில்கள் திறப்பு: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில்  தரிசனம் செய்த பக்தர்கள்
x
தினத்தந்தி 19 Jan 2022 5:08 PM GMT (Updated: 19 Jan 2022 5:08 PM GMT)

5 நாட்களுக்கு பின் கோவில்கள் திறக்கப்பட்டதால் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அன்னவாசல்:
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசால் கட்டுப்பாடுகள கடுமையாக விதிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வழிபாட்டு தலங்களுக்கும் முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 31-ந்தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. 
கடந்த 14-ந்தேதி தைப்பொங்கல் பண்டிகை முதல் 18-ந்தேதி தைப்பூசம் வரை அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் கோவில் நடைசாத்தப் பட்டதால் பக்தர்கள் பண்டிகை நாட்களில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கோவில் வாசல்களில் கற்பூரம் ஏற்றி வைத்து வழிபட்டனர். வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டாலும், ஆகம விதிமுறைப்படி கோவில்களில் பூஜைகள் மட்டும் நடைபெற்றன. 
முத்துமாரியம்மன் கோவில் 
இந்த நிலையில் அன்னவாசல் அருகே நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர். 5 நாட்களுக்கு பின் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அன்னவாசல் பகுதிகளில் உள்ள நார்த்தாமலை உள்பட பல்வேறு கோவிலில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்மன் கோவிலில் 5 நாட்களுக்கு பின் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி காலையில் தொடங்கி இரவு வரை நீண்ட வரிசையில் சென்று பொதுமக்கள் சாமி கும்பிட்டனர். வழக்கமாக பொங்கல் நாளில் பொதுமக்கள் செய்யும் நேர்த்திக்கடன்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அம்புக்கோவில் பக்த லலிதேஸ்வரர் உடனுறை தாயினும் நல்லாள் கோவிலிலும் 5 நாட்களுக்கு பின் நடை திறக்கப்பட்டது. பெண்கள் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில், 5 நாட்களுக்கு பிறகு நேற்று கோவில்கள் திறக்கப்பட்டது. புதுக்கோட்டையில் உள்ள சாந்தாரம்மன் கோவில், திருப்பூர் முத்துமாரியம்மன் கோவில், திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில், மேல ராஜ வீதியில் உள்ள தண்டாயுதபாணி கோவில், கீழ 3-ம் வீதியில் உள்ள பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story