மேகதாதுவை முற்றுகையிட சென்ற தமிழக விவசாயிகள் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தம்


மேகதாதுவை முற்றுகையிட சென்ற தமிழக விவசாயிகள் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Jan 2022 5:14 PM GMT (Updated: 2022-01-19T22:44:34+05:30)

மேகதாதுவை முற்றுகையிட சென்ற தமிழக விவசாயிகளை மாநில எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஓசூர்:
மேகதாது அணை
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் ராசிமணல் பகுதியில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நடத்திய பாதயாத்திரையை கண்டித்தும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மேகதாதுவை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், விவசாயிகள் நேற்று முன்தினம் திருவாரூரில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வந்தனர். பின்னர் அவர்கள் ஓசூர் தர்கா பகுதியில் இருந்து மேகதாது நோக்கி கோஷங்களை எழுப்பிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். 
தடுத்து நிறுத்தம்
விவசாயிகளை மாநில எல்லையான சிப்காட் பகுதியில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் அங்கு அமர்ந்து கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை முடித்து கொண்டு திரும்பினர். அப்போது பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மேகதாது அணை கட்ட வலியுறுத்தி பாதயாத்திரை நடத்தியது கண்டிக்கத்தக்கது. இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணானது. மத்திய அரசு மறைமுகமாக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சதி செயலில் ஈடுபடுகிறது. கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் சதியை கண்டிக்க தவறும் தி.மு.க. அரசை வன்மையாக கண்டிக்கிறோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னமும் மவுனமாக இருப்பது ஏற்கதக்கதல்ல. அவர் உடனடியாக தலையிட்டு நமது உரிமை பறிபோவதை தடுக்க வேண்டும்.
அனைத்துக் கட்சி கூட்டம்
தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்ட களத்தில் இறங்க வேண்டும். தமிழக அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு, கட்சியினரை மட்டுமின்றி, பல்வேறு அமைப்பினரையும் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். இல்லையென்றால் தமிழக விவசாயிகள் சார்பில் நாங்களே அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துவோம். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக போராட்டத்தில் அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு மாநில பொது செயலாளர் பாலாறு வெங்கடேசன், புதுச்சேரி மாநில தலைவர் ராஜேந்திரன், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு சங்க தலைவர் ஆதிமூலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் போராட்டத்தையொட்டி ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Next Story