கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 732 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்-கலெக்டர் தகவல்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 732 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Jan 2022 5:14 PM GMT (Updated: 19 Jan 2022 5:14 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 732 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி:
இன்று முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா தொற்றை தடுப்பதற்காக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகள் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும். 
இந்த நிலையில் 19-வது தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று (வியாழக்கிழமை) மாவட்டம் முழுவதும் 732 இடங்களில் நடக்கிறது. கொரோனா தொற்று வராமல் பாதுகாத்து கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வது மிகவும் அவசியம். 
பூஸ்டர் டோஸ்
தடுப்பூசி செலுத்திய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். தற்போது முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆயிரத்து 606 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
முககவசம் அணியாதவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். இதுவரை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 112 பேருக்கு ரூ.2 கோடியே 35 லட்சத்து 39 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், துணை கலெக்டர் (பயிற்சி) அபிநயா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story