‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 Jan 2022 7:19 PM GMT (Updated: 2022-01-20T00:49:11+05:30)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
அரியலூர் மாவட்டம் 7-வது வார்டு மேல தெருவில் மகளிர் பொதுகழிப்பிடம் அருகே குப்பைகள் கொட்டப்படுகிறது. ஆனால் இந்த குப்பைகள் சரிவர அகற்றப்படாததால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
ரஞ்சித் குமார், அரியலூர்.
பள்ளத்தை மூட கோரிக்கை
திருச்சி உறையூர் 60-வது வார்டு பகுதி காவல்கார தெருவில் வெக்காளியம்மன் கோவில் அருகில் குடிநீர் பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக சரிசெய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயலலிதா, உறையூர், திருச்சி.
கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் 133 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் உபரி நீர் வெளியேறும் பகுதியில் சிறுகுடல் சாலையையொட்டி ஓரிடத்தில்  பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் செங்குணம்  ஏரி நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறியதால் இங்கு கொட்டப்பட்ட கழிவுகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார் அய்யாவு, பெரம்பலூர்.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி காந்தி பழைய மீன் மார்க்கெட் இ.பி. ரோடு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து மிகவும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். மேலும், எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விக்னேஷ், திருச்சி.
குடிநீர் குழாயில் உடைப்பு
அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் நீரேற்று நிலையத்தில் இருந்து கீழப்பலூர் நகர் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் கிடைக்காததால் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், தேங்கி நிற்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.
ரவி, அரியலூர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறவில்லை. இதனால் சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் மீண்டும் போடப்பட்டுள்ளன. இதனால் வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு சாலையை உடனே விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், சுப்பிரமணியபுரம், திருச்சி.
சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா, கீழமஞ்சக்குடி ஊராட்சி, ஜெகதாப்பட்டினம் மேற்கு தெருவில் மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமணி, புதுக்கோட்டை.
தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு
திருச்சி பொன்மலை, சுப்பிரமணியபுரம், கொட்டப்பட்டு பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இவை திடீரென சாலையை கடப்பதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் இந்த நாய்கள் அவ்வழியே செல்பவர்களை கடிக்க வருவதால் பொதுமக்கள், பயணிகள் பெரிதும் அச்சத்துடனே அப்பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ், கொட்டப்பட்டு இந்திராநகர் திருச்சி.
சமயபுரம் தெப்பக்குளம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்வோர் அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வம், சமயபுரம், திருச்சி.

Next Story