நெல்லையப்பர் கோவிலில் நடராஜர் திருநடன காட்சி


நெல்லையப்பர் கோவிலில் நடராஜர் திருநடன காட்சி
x
தினத்தந்தி 19 Jan 2022 8:12 PM GMT (Updated: 2022-01-20T01:42:36+05:30)

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று நடராஜர் திருநடன காட்சி நடந்தது.

நெல்லை:
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று நடராஜர் திருநடன காட்சி நடந்தது. 

தைப்பூச திருவிழா
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று முன்தினம் கோவிலில் உள்ள உள் தெப்பக்குளத்தில் சுவாமி, அம்பாள், அகஸ்தியர், குங்கிலிங்கநாயனார், தாமிரபரணி, அஸ்திரதேவர் அஸ்திரதேவி, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு தைப்பூச தீர்த்தவாரி நடைபெற்றது.

திருநடன காட்சி
இந்த நிலையில் நேற்று நெல்லையப்பர் கோவிலில் உள்ள சவுந்தரிய சபா மண்டபத்தில் நடராஜரின் திருநடன காட்சி நடைபெற்றது. அப்போது நடராஜர் திருநடனம் ஆடும் வைபவமும், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது.
வழக்கமாக தைப்பூச திருநாளையொட்டி சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் சந்திப்பிள்ளையார் கோவில் அருகே நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அம்மன் சன்னதி முன்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு சுவாமி, காந்திமதி அம்பாளுக்கு நடராஜருடன் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.
அப்போது சுவாமிக்கும், அம்பாளுக்கும், நடராஜருக்கும் தீபாராதனையும், சிறப்பு அபிஷேக அலங்காரமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தெப்பத்திருவிழா
தைப்பூச திருவிழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை) நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பக்குளத்தில் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் 9 சுற்றுகள் சுற்றி வருவார்கள். இதற்காக வெளி தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு, சாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்பவர்கள் முககவசம் அணிந்து, அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story