‘டவுசர்’ அணிந்து சென்றதால் கம்ப்யூட்டர் என்ஜினீயரை அவமதித்த வட்டார போக்குவரத்து அதிகாரி


‘டவுசர்’ அணிந்து சென்றதால் கம்ப்யூட்டர் என்ஜினீயரை அவமதித்த வட்டார போக்குவரத்து அதிகாரி
x
தினத்தந்தி 19 Jan 2022 9:25 PM GMT (Updated: 19 Jan 2022 9:25 PM GMT)

‘டவுசர்’ அணிந்து சென்றதால் தன்னை அவமதித்தார் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி மீது கம்ப்யூட்டர் என்ஜினீயர் புகார் தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு: ‘டவுசர்’ அணிந்து சென்றதால் தன்னை அவமதித்தார் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி மீது கம்ப்யூட்டர் என்ஜினீயர் புகார் தெரிவித்து உள்ளார்.

‘டவுசர்’ அணிந்து...

பெங்களூரு நாகரபாவி பகுதியில் வசித்து வருபவர் நிதிஷ் ராவ். இவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக நிதிஷ் ராவ், ஞானபாரதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காரை ஓட்டி காண்பித்து இருந்தார்.

 பின்னர் ஓட்டுனர் உரிமத்தின் நிலை பற்றி அவர் இணையதளத்தில் பார்த்தார். ஆனால் இணையதளத்தில் சரியான தகவல் கிடைக்கவில்லை.
இதையடுத்து ஞானபாரதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலவலகம் சென்ற நிதிஷ்ராவ், தனது ஓட்டுனர் உரிமத்தின் நிலை குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் கேட்டு உள்ளார். அப்போது நிதிஷ்ராவ் ‘டவுசர்’ அணிந்து வந்திருந்ததை கவனித்த வட்டார போக்குவரத்து அதிகாரி, நிதிஷ் ராவிடம் ‘டவுசர்’ அணிந்து வந்தது குறித்து கேட்டு வாக்குவாதம் செய்தார்.

 மேலும் உனது ஓட்டுனர் உரிமத்தின் நிலை பற்றி எதுவும் சொல்ல முடியாது. உன்னால் முடிந்ததை செய்து கொள் என்று பேசி அவமதித்ததாக தெரிகிறது.

உபசரிக்க மாட்டோம்

இந்த சம்பவம் குறித்து நிதிஷ் ராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து கர்நாடக அரசு மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை ‘டேக்’ செய்துள்ளார். அந்த பதிவை பார்த்த சிலர் நிதிஷ் ராவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். நிகில் குல்கர்னி என்பவர் தனது டுவிட்டர் பதிவில் ‘கண்ணாடி அணிந்து கொண்டு வட்டார போக்குவரத்து அதிகாரி முன்பு எனது சகோதரர் பேசியதால் அவரது ஓட்டுநர் பயிற்சி தேர்வு ரத்து செய்யப்பட்டது’ என்று கூறி இருந்தார். மேலும் சிலர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆணவத்துடன் நடந்து கொள்வதாகவும் தங்களது கருத்துகளை பதிவிட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து கமிஷனர் சிவக்குமார் கூறும்போது, ‘வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வருபவர்களுக்கு உடை கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆனால் அரசு அலுவலகத்துக்கு வருபவர்கள் நாகரீகமாக உடை அணிந்து கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. சரியாக உடை அணிந்து வராதவர்களை நாங்கள் உபசரிக்க மாட்டோம்’ என்றார்.

Next Story