கும்மிடிப்பூண்டியில் போலீசாரை தாக்கிய வழக்கில் ரவுடி கைது


கும்மிடிப்பூண்டியில் போலீசாரை தாக்கிய வழக்கில் ரவுடி கைது
x
தினத்தந்தி 20 Jan 2022 2:56 PM GMT (Updated: 2022-01-20T20:26:12+05:30)

கும்மிடிப்பூண்டி அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய ரவுடியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தாக்குதல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 25). இவர் மீது பல்வேறு திருட்டு மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. தலைமறைவு குற்றவாளியான இவர், ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டு கடந்த சில மாதங்களாக போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆத்துப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் யுவராஜ் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் (34) மற்றும் போலீஸ்காரர் விமல்ராஜ் (27) ஆகியோர் அங்கு சென்று யுவராஜை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அவரது குடும்பத்தினர் போலீசாரை தடுத்து நிறுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது கத்தி முனையில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி யுவராஜும் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

கைது

மேலும், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரின் இடது கையை கடித்து விட்டு அங்கிருந்து யுவராஜ் தப்பிச்சென்று விட்டார்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் ஆகிய 2 பேரும் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசாரை தாக்கி விட்டு தப்பிய ரவுடி யுவராஜை நேற்று கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்தனர்.


Next Story