2 கோவில்களுக்கு சொந்தமான ரூ15 கோடி நிலம் மீட்பு


2 கோவில்களுக்கு சொந்தமான ரூ15 கோடி நிலம் மீட்பு
x
தினத்தந்தி 20 Jan 2022 3:41 PM GMT (Updated: 2022-01-20T21:11:19+05:30)

ஊத்துக்குளியில் 2 கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த 34.45 ஏக்கர் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.

ஊத்துக்குளி
ஊத்துக்குளியில் 2 கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த  34.45 ஏக்கர் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.
கோவில்கள்
 ஊத்துக்குளி அருகே உள்ள நடுப்பட்டியில் திருவேங்கடமுடையான் என்கிற சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலுக்கு  சொந்தமான 20.07 ஏக்கர் நிலம் நடுப்பட்டியிலும், 10.01 ஏக்கர் நிலம் புத்தூர்பள்ளபாளையத்திலும் உள்ளது.
 அதே போல் பல்லவராயன் பாளையம் ஊராட்சி இரட்டை கிணறு பகுதியில் உள்ள பகவதி அம்மன், மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 4.37 ஏக்கர் நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான 34.45 ஏக்கர் விவசாய நிலமும்  ஆக்கிரமிப்பில் இருந்தது.இந்த நிலங்களை மீட்க வேண்டும் என்று  இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. 
ரூ.15 கோடி 
அதன்படி நடுப்பட்டி, புத்தூர் பள்ளபாளையம், இரட்டைக் கிணறு ஆகிய பகுதிகளில் கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்களை ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர். இவர்களை கோவில் நிர்வாகத்தினர் திருப்பூர் மாவட்ட இணை ஆணையர் நடராஜன்  உத்தரவின்படி நேரில் அழைத்து கோவில் நிலங்களை ஒப்படைக்கும் படி அறிவுறுத்தினர். இதையடுத்து கோவில் நிலம் கோவிலுக்கு ஒப்படைக்கப்பட்டது. 
இதையடுத்து  இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் ஆய்வாளர் ஆதிரை, கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், ஊத்துக்குளி வருவாய் துறை ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர்கள் சிவராஜ், காந்திமதி ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர்.பின்னர் அந்த நிலங்களை மீட்டு அதில் பதாகை வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.15 கோடியாகும். 

Next Story