பவானி அருகே பட்டப்பகலில் பயங்கரம் பேராசிரியரின் மனைவியை கொன்று நகை பறிப்பு


பவானி அருகே பட்டப்பகலில் பயங்கரம் பேராசிரியரின் மனைவியை கொன்று நகை பறிப்பு
x
தினத்தந்தி 20 Jan 2022 3:52 PM GMT (Updated: 20 Jan 2022 3:52 PM GMT)

பவானி அருகே பேராசிரியரின் மனைவியை கொன்று நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பவானி அருகே பேராசிரியரின் மனைவியை கொன்று நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 
பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பேராசிரியரின் மனைவி
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கே.கே.நகர் 3-வது வீதியில் வசித்து வருபவர் கணேசன் (வயது 60). இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி வளர்மதி (55). இவர்களுக்கு சிவரஞ்சனி, சிவசங்கரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
கணேசன் நேற்று காலை பவானியில் உள்ள கருவூலத்துக்கு சென்று வருவதாக கூறிவிட்டு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் கணேசன் வளர்மதியின் செல்போனை தொடர்பு கொண்டு பேசினார். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வளர்மதியின் செல்போனை தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது செல்போன் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஆனால் அவர் எடுக்கவில்லை.
ரத்த வெள்ளத்தில் பிணம்
இதனால் கணேசன் உடனே வீட்டு்க்கு விரைந்தார். அங்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. கதவின் முன்புறம் டி.வி. ரிமோட், செல்போன் உடைந்த நிலையில் காணப்பட்டது. டி.வி. சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது. இதனால் பதறி அடித்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வளர்மதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. உடனே இதுபற்றி அவர் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு் விசாரணை நடத்தினார்கள். 
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட கூடுதல் சூப்பிரண்டுகள் கனகேஸ்வரி, பாலாஜி மற்றும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் கண்ணன், அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரம் வரை ஓடியது. பின்னர் அங்கேயே  நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். 
சரமாரி கத்திக்குத்து
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நேற்று மதியம் கணேசன் வெளியே சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டு்க்குள் புகுந்துள்ளார்கள். அப்போது அவர்கள் வளர்மதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கசங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்கள். அவர் கொடுக்க மறுத்ததால் தாங்கள் வைத்திருந்த கத்தியால் வளர்மதியின் உடலில் சரமாரியாக குத்தி கொன்றுவிட்டு, நகையுடன் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
வலைவீச்சு
கொலை நடந்த வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்கள் 2 பேரின் உருவங்கள் பதிவாகியிருந்தது. அந்த உருவங்களை வைத்து கொலையாளிகளை பிடிக்க பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண் பட்டப்பகலில் நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 
----------------

Related Tags :
Next Story