ஈரோடு மாவட்டத்தில் 503 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


ஈரோடு மாவட்டத்தில் 503 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 20 Jan 2022 4:00 PM GMT (Updated: 20 Jan 2022 4:00 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 503 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 503 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
கொரோனா 3-வது அலை
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவுவதை தடுக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் இலக்குடன் இல்லம் தேடி தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-வது தவணை தடுப்பூசிகளும், 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
503 மையங்கள்
ஈரோடு மாவட்டத்தில் இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்பட 503 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 2012 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். 66 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு அதாவது 2007-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னதாக பிறந்தவர்களுக்கும் கோவாக்சின் வகை தடுப்பூசிகள் இந்த முகாமில் செலுத்தப்பட உள்ளன.
பூஸ்டர் தடுப்பூசி
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களில் ஏற்கனவே இரு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் பூர்த்தி அடைந்தவர்கள் தகுதியுடையவர்களாவார்கள். முன்பு 2 தவணை தடுப்பூசிகளில் எந்த வகை தடுப்பூசி (கோவிசீல்டு மற்றும் கோவேக்சின்) செலுத்திக்கொண்டார்களோ அந்த வகை தடுப்பூசியே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தப்படும்.
வாரந்தோறும் வியாழக்கிழமை பூஸ்டர் தடுப்பூசி அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்களில் இலவசமாக செலுத்தப்பட உள்ளது. தற்போது புதிதாக மிகவேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.
எனவே, பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Next Story