தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 20 Jan 2022 4:21 PM GMT (Updated: 2022-01-20T21:53:42+05:30)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி பாலக்கரை மேம்பாலம் மற்றும் பீமநகர் பகுதி பாலம் இறங்கும் இடத்தில் 6 இடங்களுக்கு மேல் விரிசல் ஏற்பட்டும், பள்ளமாகவும் காட்சியளித்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கண்ட பாலங்களில் இருந்த பள்ளங்களை சீரமைத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
சையது முஸ்தபா, பாலக்கரை, திருச்சி.


ஆபத்தான மின்மாற்றி
பெரம்பலூர், புதிய மதனகோபாலபுரம், பாரதிதாசன் நகரில் தற்போது குடியிருப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது அந்தப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபத்தான நிலையில் மின்மாற்றி ஒன்று உள்ளது. அந்த மின்மாற்றியின் அருகே அப்பகுதி குழந்தைகள் பகல் நேரத்தில் விளையாடி வருகின்றனர். இதனால் எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன் அந்த மின்மாற்றியை குடியிருப்பு இல்லாத பகுதிக்கு மாற்ற சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள்,  பெரம்பலூர்.

அணைக்கட்டு சரிசெய்யப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், பாப்பாபட்டி ஊராட்சி அருத்தோடிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் சிலர் ஒன்றிணைந்து சொந்த செலவில் அணைக்கட்டு கட்டி விவசாயம் செய்து வந்தனர். தற்போது அந்த அணைக்கட்டு உடைந்துள்ளது. தற்போது பொருளாதாரம் இல்லாமல் அணையை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் உடைந்து அணையை கட்டி சரிசெய்ய தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சேக்பக்ரூதீன், அருத்தோடிப்பட்டி, புதுக்கோட்டை.

எரிமேடை வசதி வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி தாலுகா மஞ்சக்குடி பஞ்சாயத்து தெற்கு பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாரேனும் இறந்தால் சுடுகாட்டில் எரிப்பதற்கு எரிமேடை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சுடுகாட்டில் எரிமேடை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மஞ்சக்குடி, புதுக்கோட்டை.

சுவிட்ஜ் போர்டு சரிசெய்யப்படுமா?
கரூர் மாவட்டம், வேலுச்சாமி புரம் 2-வது தெருவில் அரசு பள்ளியின் அருகே மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் குழாய் உள்ளது. பள்ளியில் பயிலும் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டு விட்டு இந்த குடிநீர் குழாயில் தான் தங்கள் கைகள் மற்றும் தட்டுகளை கழுவி வருகின்றனர். தற்போது மின்மோட்டார் சுவிட்ஜ் போர்டு ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படு முன்பு அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 சரவணன், கரூர்.

எரியாத தெருவிளக்குகள்
கரூர் மாவட்டம், நெய்தலூர் ஊராட்சி நெய்தலூர் காலனி, கல்லடிகளம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சாலை ஓரத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தில் தெரு விளக்கு பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மிகவும் இருட்டாக இருப்பதால் பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் குடியிருப்பு வீடுகளுக்குள் சென்று விடுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்
பொதுமக்கள், கல்லடிகளம்,கரூர்.

நாய்கள் தொல்லை
திருச்சி மாவட்டம், திருப்பைஞ்சீலி பாரதிநகரில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் தெருவில் நடக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை துரத்தி சென்று கடித்து வருகிறது. மேலும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோரை பின்னால் கடிக்க துரத்தி வருகிறது. இதனால் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே இந்த நாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருப்பைஞ்சீலி, திருச்சி.

Next Story