பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை ஏப்ரல் மாதம் வரை திறக்க வேண்டாம்; தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம்


பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை ஏப்ரல் மாதம் வரை திறக்க வேண்டாம்; தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம்
x
தினத்தந்தி 20 Jan 2022 4:23 PM GMT (Updated: 2022-01-20T21:53:24+05:30)

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை ஏப்ரல் மாதம் வரை திறக்க வேண்டாம் என்று ஆந்திர அரசுக்கு தமிழக அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.

10.9 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளில் மொத்தம் 11.700 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். வடகிழக்கு பருவமழை கடந்த 2 மாதமாக கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளன. தற்போதைய நிலவரப்படி 5 ஏரிகளிலும் மொத்தம் 10.9 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

இது மொத்த கொள்ளளவில் 93 சதவீதம் ஆகும். சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடவேண்டும்.

திறந்து விட வேண்டாம்

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். தற்போது சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் நிரம்பி இருப்பதால் ஏப்ரல் மாதம் வரை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்துவிட வேண்டாம் என்று ஆந்திர அரசுக்கு தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும்.

இதில் தற்போது 3.122 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் கிருஷ்ணா தண்ணீரை சேமிக்க பயன்படும் கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரி முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. எனவே கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டால் அதனை பூண்டி, கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகளில் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர். கோடை காலத்தை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மண் சரிவு

இதுதொடர்பாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டால் தண்ணீரை ஏரிகளில் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படும். சராசரியாக தற்போது மாதம் தோறும் 1,200 முதல் 1,500 மில்லியன் கன அடி தண்ணீர் குடிநீருக்காக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏரிகளில் தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் வரை கிருஷ்ணா நதி நீர் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளோம். மேலும் கண்டலேறு - பூண்டி ஏரி இடையே உள்ள கிருஷ்ணா கால்வாயில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனை மார்ச் மாதத்துக்குள் சரி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணா கால்வாயில் தொடர்ந்து சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இந்த பணி மெதுவாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story