நாமக்கல்லில் திருட்டு போன ரூ.8 லட்சம் லாரி மீட்பு டிரைவர் கைது


நாமக்கல்லில் திருட்டு போன ரூ.8 லட்சம் லாரி மீட்பு டிரைவர் கைது
x
தினத்தந்தி 20 Jan 2022 4:24 PM GMT (Updated: 2022-01-20T21:54:48+05:30)

நாமக்கல்லில் திருட்டு போன ரூ.8 லட்சம் மதிப்பிலான டாரஸ் லாரியை மீட்ட போலீசார், டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்:
நாமக்கல்லில் திருட்டு போன ரூ.8 லட்சம் மதிப்பிலான டாரஸ் லாரியை மீட்ட போலீசார், டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் விடுமுறை
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் காந்திநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 53). இவர் சொந்தமாக 3 லாரிகளை வைத்துள்ளார். இதில் டாரஸ் லாரி ஒன்றை அவரே ஓட்டி வருகிறார். இந்த லாரியை லோடு இல்லாத நேரங்களில் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலக வளாகத்தில் நிறுத்தி செல்வது வழக்கம்.
வழக்கம் போல் கடந்த 14-ந் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி லாரியை நிறுத்தி விட்டு சென்றார். 18-ந் தேதி வரை லோடு கிடைக்காததால் அவர் நாமக்கல் வரவில்லை. 19-ந் தேதி காலையில் வந்த அவர் லாரியை சுத்தம் செய்து விட்டு, அங்கேயே நிறுத்தி இருந்தார். மாலையில் சிறிது தூரம் லாரியை ஓட்டி சென்ற அவர் மீண்டும் அங்கேயே கொண்டு விட்டார்.
டாரஸ் லாரி திருட்டு
அன்று இரவு 8.30 மணி அளவில் சாவியை வண்டியில் வைத்து விட்டு சாப்பிட சென்றார். மீண்டும் 9.30 மணிக்கு சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தபோது லாரி திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே திருட்டு போன லாரி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடப்பதாக உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு செல்போனில் தகவல் வந்தது. அவர் போலீசாரிடம் இதை தெரிவிக்கவே, அங்கு விரைந்து சென்ற போலீசார் திருட்டு போன ரூ.8 லட்சம் மதிப்பிலான லாரியை மீட்டனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் நாமக்கல் அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த மாயவன் (38) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story