தினத்தந்தி செய்தி எதிரொலி்: ஒரேநாளில் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை திருக்கோவிலூர் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை


தினத்தந்தி செய்தி எதிரொலி்: ஒரேநாளில் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை திருக்கோவிலூர் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Jan 2022 4:25 PM GMT (Updated: 20 Jan 2022 4:25 PM GMT)

தினத்தந்தி செய்தி எதிரொலியாக திருக்கோவிலூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 300 பேருக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

திருக்கோவிலூர், 

மர்ம காய்ச்சல் 

திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி கிராமங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், பெரும்பாலானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திகளில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் குவிந்து வருவதாகவும் நேற்றைய தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. 
இதைபார்த்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் திருக்கோவிலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொள்வதோடு, கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தவேண்டும் என சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

கொரோனா பரிசோதனை

அதன்அடிப்படையில் திருக்கோவிலூர், அரியூர், குன்னத்தூர், எடையூர் மற்றும் விளந்தை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் நேற்று திருக்கோவிலூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் வீடு, வீடாக சென்று மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனோ தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்தனர்.
குறிப்பாக நேற்று ஒரேநாளில் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தவிர கிராம புறங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருந்து தெளிக்கும் பணி மற்றும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Next Story