ராமநத்தம் அருகே கர்ப்பிணியிடம் தங்க சங்கிலி பறிப்பு மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு


ராமநத்தம் அருகே கர்ப்பிணியிடம் தங்க சங்கிலி பறிப்பு மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Jan 2022 5:03 PM GMT (Updated: 2022-01-20T22:33:01+05:30)

ராமநத்தம் அருகே கர்ப்பிணியிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்மநபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.


ராமநத்தம், 

ராமநத்தம் அருகே உள்ள தொழுதூரை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி கவுசல்யா (வயது 20). 9 மாத கர்ப்பிணியாக உள்ள இவர், திட்டக்குடி செல்வதற்காக ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தை கடக்க முயன்றார். 

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர், கவுசல்யாவின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். 


இதில் பதறிய அவர், தாலி சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டார். உடனே அந்த நபர், கவுசல்யாவின் கழுத்தில் கிடந்த 1 பவுன் எடை கொண்ட மற்றொரு தங்க சங்கிலியை பறித்தார்.

 இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், மர்மநபரை பிடிக்க முயன்றனர். 


ஆனால் அவர், தான் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.35 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

Next Story