‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Jan 2022 5:23 PM GMT (Updated: 2022-01-20T22:53:24+05:30)

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான மின்கம்பிகள்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தான் கடைத்தெருவில் பொதுமக்கள் வசதிக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்களில் செல்லும் மின்கம்பிகள் கஜா புயலின் போது சேதமடைந்துவிட்டன. குறிப்பாக மின் கம்பிகளில் உள்ள சிறிய இரும்பு வயர்கள் அறுந்து உள்ளன. இதனால் மின்கம்பிகள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சேதமடைந்துள்ள மின்கம்பிகளை அகற்றிவிட்டு புதிய மின் கம்பிகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பெருகவாழ்ந்தான் கடைத்தெருவாசிகள்.

கைப்பம்பு சீரமைக்கப்படுமா? 

நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த வாழ்மங்கலம் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக கைப்பம்பு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கைப்பம்பு முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்து கிடைக்கிறது. இதனால் கை பம்பில் உள்ள பாகங்கள் உடைந்து உள்ளன. மேலும், கைப்பம்பு முழுவதும் துருப்பிடித்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி கைபம்பை சுற்றி கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள கைப்பம்மை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-வாழ்மங்கலம் பகுதி மக்கள், நாகை.

Next Story