ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Jan 2022 5:42 PM GMT (Updated: 2022-01-20T23:12:54+05:30)

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
919 பேர்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 2 நாட்களாக 900-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 57 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 906 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 919 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 110 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 924 பேர் குணமடைந்து உள்ளனர்.
நேற்று மட்டும் 406 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. தற்போது 4 ஆயிரத்து 465 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
3 பேர்
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 57 வயது பெண் கொரோனா பாதிப்பு காரணமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த 15-ந் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர் 17-ந் தேதியும், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 43 வயது ஆண் 18-ந் தேதியும் உயிரிழந்தனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 721 ஆக உயர்ந்தது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதி
கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டால் அந்த வீட்டையும், ஒரே வீதியில் 5 குடும்பத்தினருக்கு தொற்று ஏற்பட்டால் அந்த வீதியையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story