பிளஸ்-2 மாணவி தற்கொலை;சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 72 பேர் கைது


பிளஸ்-2 மாணவி தற்கொலை;சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 72 பேர் கைது
x
தினத்தந்தி 20 Jan 2022 6:12 PM GMT (Updated: 20 Jan 2022 6:12 PM GMT)

பிளஸ்-2 மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 72 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர், 
மாணவி தற்கொலை
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கியிருந்து பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்தநிலையில், விடுதியில் வேலை செய்யுமாறு வற்புறுத்தியதால் மனமுடைந்த லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி விடுதி வார்டன் சகாயமேரியை (62) போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு திருமானூர் பஸ் நிலையம் அருகே பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு தலைவர் இளையராஜா உள்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதேபோல் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விடுதியில் வேலை செய்ய கூறியதால் லாவண்யா தற்கொலை செய்யவில்லை. லாவண்யாவை அந்த பள்ளி நிர்வாகத்தினர் மதமாற்றம் செய்ய முயற்சித்தால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், எனவே அந்த பள்ளி நிர்வாகத்தினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
பா.ஜனதாவினர் சாலை மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் சேர்ந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்று ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். 

Next Story