60 சிறுவர்கள் உள்பட 1,186 பேர் கொரோனாவால் பாதிப்பு


60 சிறுவர்கள் உள்பட 1,186 பேர் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 20 Jan 2022 7:13 PM GMT (Updated: 20 Jan 2022 7:13 PM GMT)

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 சிறுவர்கள் உள்பட 1,186 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 சிறுவர்கள் உள்பட 1,186 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
1,186 பேர் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் குமரி மாவட்டமும் ஒன்றாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் முதல் நாள் எண்ணிக்கையை விட குறைந்தது 100 முதல் அதிகபட்சமாக 200 பேர் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த 18-ந் தேதி குமரி மாவட்டத்தில் 1,008 ஆக கொரோனா பாதிப்பு உயர்ந்தது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 66,836 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,186 ஆக அதிகரித்துள்ளது.
பகுதி வாரியாக
அதாவது நேற்று முன்தினம் 5,944 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,186 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 6 பேரும், கேரள மாநிலத்தை சேர்ந்த 5 பேரும், குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1,175 பேரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்களில் ஆண்கள் 551 பேரும், பெண்கள் 575 பேரும், சிறுவர்கள் 32 பேரும், சிறுமிகள் 28 பேரும் அடங்குவர்.
அகஸ்தீஸ்வரம் பகுதியில் 99 பேரும், கிள்ளியூர் பகுதியில் 97 பேரும், குருந்தங்கோடு பகுதியில் 88 பேரும், மேல்புறம் பகுதியில் 47 பேரும், முன்சிறை பகுதியில் 102 பேரும், நாகர்கோவில் நகரில் 260 பேரும், ராஜாக்கமங்கலம் பகுதியில் 97 பேரும், திருவட்டார் பகுதியில் 119 பேரும், தோவாளை பகுதியில் 191 பேரும், தக்கலை பகுதியில் 75 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் பாதிப்பு
நாகர்கோவிலில் கோட்டார் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ஒரு பெண் போலீசும், கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனையொட்டி கோட்டார் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
மேலும் நாகர்கோவில் போலீஸ் நிலையம் ஒன்றில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவரின் குடும்பத்தினர் வெளி மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விடுப்பு எடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் குளச்சலில் பணியாற்றி வரும் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள போலீசாருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
நகைக்கடை-லாட்ஜ் ஊழியர்கள்
இதேபோல் நாகர்கோவில் கே.பி.ரோடு பகுதியில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் 4 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் 4 ஊழியர்களும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். 
மேலும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஊழியர் ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை பரவலாக உயர்ந்து வருகிறது.

Next Story