தவறான வீடியோ பதிவை தடுக்காவிட்டால் யூ-டியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி


தவறான வீடியோ பதிவை தடுக்காவிட்டால் யூ-டியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 20 Jan 2022 9:18 PM GMT (Updated: 2022-01-21T02:48:49+05:30)

தவறான வீடியோ பதிவை தடுக்காவிட்டால் யூ-டியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை
தவறான வீடியோ பதிவை தடுக்காவிட்டால் யூ-டியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
சாட்டை துரைமுருகன்
யூ-டியூப் வலைத்தளத்தில் சாட்டை துரைமுருகன் என்பவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு விமர்சனம் செய்து வீடியோ வௌியிட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார்.
ஆனால் அவருக்கு விதித்த நிபந்தனையை மீறி மீண்டும் அவதூறாக பேசியதாக மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனவே அவருக்கு விதித்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீசார் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது, என்றார்.
தவறான வீடியோக்கள்
இதையடுத்து நீதிபதி, “அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. சாட்டை துரைமுருகன் என்ன தொழில் செய்கிறார்? யூ-டியூப்பில் இதுபோன்ற செய்திகள் வெளியிடுவதன் மூலம் அவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதை கண்டுபிடித்து இந்த கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
மேலும், “யூ-டியூப்பில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது, துப்பாக்கி தயாரிப்பது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? வங்கிகளில் கொள்ளையடிப்பது எப்படி? என்பது போன்ற விவரங்களை யூ-டியூப் கற்றுக் கொடுத்து இருப்பதை எதன் அடிப்படையில் ஆதரிக்கின்றனர்? இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஏன் தடை செய்யக்கூடாது?
இதை தொடர்ந்து, “தவறான வீடியோக்களையும் யூ-டியூப் வெளியிடுமா? வேறு மாநிலத்தில் இருந்து தவறான வீடியோக்கள் பதிவேற்றப்படுகிறதா? இதனை தடுக்க முடியவில்லை என்றால், யூ-டியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது? யூ-டியூப்பில் நல்ல விஷயங்கள் உள்ளன. ஆனால் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் நீதிபதி எழுப்பினார்.
பின்னர் “யூ-டியூப்பில் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சைபர் கிரைம் டி.ஜி.பி. விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் இந்த கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Next Story