அரசுக்கு வழங்க வேண்டிய வாடகை பாக்கியை அண்ணாநகர் கிளப் 4 வாரத்துக்குள் செலுத்த வேண்டும்


அரசுக்கு வழங்க வேண்டிய வாடகை பாக்கியை அண்ணாநகர் கிளப் 4 வாரத்துக்குள் செலுத்த வேண்டும்
x
தினத்தந்தி 21 Jan 2022 12:25 AM GMT (Updated: 2022-01-21T05:55:40+05:30)

அரசுக்கு வழங்க வேண்டிய வாடகை பாக்கியை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று சென்னை அண்ணாநகர் கிளப் நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 7 கிரவுண்ட் நிலத்தில் சென்னை அண்ணாநகரில் உள்ள அண்ணாநகர் கிளப் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தைப் பயன்படுத்துவதற்கு அண்ணாநகர் கிளப்பிற்கு ரூ.20 ஆயிரம் மாத வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. கிளப்பில் அறைகள், மதுபானக்கூடம் செயல்படுவதற்கு அனுமதி கோரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம், அண்ணாநகர் கிளப் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த வீட்டு வசதி வாரியம், நிலுவையிலுள்ள வாடகைப் பாக்கியைச் செலுத்துமாறு கடிதம் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அண்ணா நகர் கிளப்பின் செயலாளர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

விதிகளின்படி

அந்த மனுவில், கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் முதல் வாடகைப் பாக்கியான ரூ.52 லட்சத்து 25 ஆயிரத்து 960 நிலுவையில் உள்ளது. இதில் ரூ.20 லட்சம் செலுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் மீதமுள்ள நிலுவையில் இருக்கும் தொகையைச் செலுத்துமாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் தான் கிளப் செயல்படுகிறது. எனவே அதன் விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும்.

சட்டத்தில் இடமில்லை

அந்த விதிகளை மீறி, எந்த அனுமதியையும் சம்பந்தப்பட்ட கிளப் கேட்க முடியாது. சங்கங்களின் பதிவு சட்டத்தின்படி, மனுதாரர் கிளப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்க பதிவு சட்ட விதிகள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விதிகள் ஆகியவற்றை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால், கிளப்புக்கு வழங்கப்பட்ட அனுமதியை அதிகாரிகள் ரத்து செய்யலாம். கிளப்பில் பார் செயல்பட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சட்டத்தில் இடமில்லை. மேலும், தற்போதைய சந்தை மதிப்புபடி நியாயமான வாடகையை நிர்ணயிப்பதோடு, நிலுவையில் உள்ள வாடகை தொகையை கணக்கிட வேண்டும். அதுதொடர்பாக கடிதத்தை ஒரு மாதத்திற்குள் கிளப் நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும்.

அபராதம் வசூலிப்பு

அந்த கடிதம் கிடைத்த 4 வாரத்திற்குள் நிலுவை தொகையை கிளப் நிர்வாகம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் கிளப்பை காலி செய்வது, நிலுவை தொகை, அபராதம் வசூலிப்பது போன்ற நடவடிக்கைகளை சட்டத்திற்குட்பட்டு மேற்கொள்ளலாம். வீட்டு வசதி வாரியத்திற்கு இழப்பு ஏற்படுமாயின், அது அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பாகும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story