திருவள்ளூர் மாவட்டத்தில் 75 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


திருவள்ளூர் மாவட்டத்தில் 75 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 21 Jan 2022 2:36 PM GMT (Updated: 2022-01-21T20:06:52+05:30)

திருவள்ளூர் மாவட்டத்தில் 75 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் ஆய்வு

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள குத்தம்பாக்கம் ஊராட்சியில் நல் வாழ்வு மையத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டார்.

அதை தொடர்ந்து அமைச்சர் குத்தம்பாக்கம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை சரிபார்த்து பொதுமக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசியை செலுத்தி கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

1 லட்சத்து 62 ஆயிரத்து 631 நபர்களுக்கு

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி 600-க்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு பணியை கடந்த 10-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். தொடர்ச்சியாக இதுவரை 1 லட்சத்து 62 ஆயிரத்து 631 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று வரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியானவர்களாக 5 லட்சத்து 52 ஆயிரத்து 754 பேர் என கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த மாதம் இறுதிக்குள் 10 லட்சம் என்கின்ற இலக்கை தொட உள்ளது. எனவே 10 லட்சம் பேருக்கு இந்த மாத இறுதிக்குள் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை நிறைவு செய்வதற்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் மெகா முகாம்கள் தமிழ்நாட்டில் 600 இடங்களில் நடைபெறுகிறது.

தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம்கள் இங்கே தொடங்கியுள்ளது சிறப்புக்குரியதாகும்.

75.6 சதவீத குழந்தைகளுக்கு

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி ஒரு இயக்கமாகவே நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற 18 முகாம்களின் மூலம் 4 லட்சத்து 47 ஆயிரத்து 753 மையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. அப்படி செலுத்தப்பட்டதன் விளைவாக 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரத்து 751 நபர்களுக்கு 18 மெகா முகாம்களில் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. வருகிற சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில் தமிழ்நாடு முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் முதல் தவணை தடுப்பூசியை 88.6 சதவீதமும், 2-வது தவணை தடுப்பூசி 63.4 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 75.6 சதவீத குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியிலும் திருவள்ளூர் மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு இணையாக இந்த பணியினை செய்து வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, கணபதி, மாவட்ட ஊராட்சி குழுவின் துணைத்தலைவர் கொத்தியம்பாக்கம் தேசிங்கு, சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் வினய்குமர், சம்பத், திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசிஸ்ரீவத்சவ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், இளங்கோவன், குத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன், துணைத்தலைவர் உஷா நந்தினி வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story