திருவள்ளூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை


திருவள்ளூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 21 Jan 2022 3:32 PM GMT (Updated: 2022-01-21T21:02:08+05:30)

திருவள்ளூர் அருகே தூங்கி கொண்டிருந்த தொழிலாளியின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

தொழிலாளி

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மணவாளநகர் கலைஞர் கருணாநிதி தெருவை சேர்ந்தவர் பாரதிமோகன் (வயது 30). இவரது மனைவி செம்பருத்தி (25). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவர் பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு மனைவியுடன் சென்று இருந்தார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தார். இவர் தனது மனைவியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை சரியாக மூடாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

கொள்ளை

இந்த நிலையில் நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டை சோதனையிட்டு பார்த்தபோது பீரோவில் இருந்த 3½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பாரதிமோகன் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகிறனர்.

கணவன், மனைவி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story