பண்ருட்டியில் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 2 இடங்களில் மறியல்


பண்ருட்டியில் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 2 இடங்களில் மறியல்
x
தினத்தந்தி 21 Jan 2022 4:39 PM GMT (Updated: 2022-01-21T22:09:44+05:30)

பண்ருட்டியில் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


பண்ருட்டி, 

பண்ருட்டி வழியாக விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி நடந்து வருகிறது. இதில் கண்டரக் கோட்டையில் இருந்து காடாம்புலியூர், கொள்ளுக் காரன்குட்டை வரை சாலை கந்தலாகி  போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வருகிறது.

இதனால் பிரதான சாலையாக இருக்கும் இந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விபத்துகளும் அடிக்கடி நேர்ந்து வருகிறது. சாலையை சீரமைக்க கோரி பல்வேறு அரசியல் கட்சியினர்,

 பொதுநல அமைப்பினர் குரல் கொடுத்து வந்தாலும், இதுவரை பலனில்லை. 
எனவே சாலையை சீரமைக்க கோரியும், ஆமை வேகத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணியை துரிதப்படுத்திட கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில்  நேற்று பண்ருட்டி, கண்டரக்கோட்டை ஆகிய 2 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பண்ருட்டி

அதன்படி பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்துக்கு  நகர செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு தனபால், ஒன்றிய துணை செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர் ஞானசேகர், ஒன்றிய குழு குப்புசாமி, பன்னீர்செல்வம், அருள்தாஸ், முருகன், குணசேகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

கண்டரக்கோட்டை

இதேபோல் கண்டரக்கோட்டையில் அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினர் பாலச்சந்தர், ஆறுமுகம், ஜெகதீசன், வீரமணி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். மறியல் காரணமாக, இவ்விரு பகுதிகளிலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story