தொழிலதிபரை கடத்த முயன்ற அ.தி.மு.க. பெண் பிரமுகர் உள்பட 8 பேர் கைது


தொழிலதிபரை கடத்த முயன்ற அ.தி.மு.க. பெண் பிரமுகர் உள்பட 8 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2022 4:41 PM GMT (Updated: 21 Jan 2022 4:41 PM GMT)

திருப்பூரில் தொழிலதிபரை கடத்த முயன்ற அ.தி.மு.க. பெண் பிரமுகர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்
திருப்பூரில் தொழிலதிபரை கடத்த முயன்ற அ.தி.மு.க. பெண் பிரமுகர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அ.தி.மு.க. பிரமுகர்
திருப்பூர் தென்னம்பாளையம் வேலன் நகரை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் சொந்தமாக பை மற்றும் சீட் கவர் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம், இடம் வாங்குவது தொடர்பாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த செல்வி (47) என்பவருக்கு பிரச்சினை இருந்துள்ளது. இவர் அ.தி.மு.க. மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் ஆவார்.
இந்த நிலையில் செல்வியின் தூண்டுதலின் பேரில் 7 பேர் கொண்ட கும்பல் கடந்த 19-ந்தேதி பாபுவின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகள் பேசி, கத்தியை காட்டி மிரட்டி அவரை கடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. பாபுவின் மனைவி சத்தம் போட்டதால் வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அதற்குள் 7 பேரும் காரில் தப்பி சென்றனர்.
8 பேர் கைது
இதுகுறித்து பாபு அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ரவி கண்காணிப்பில், உதவி கமிஷனர் வரதராஜன் மேற்பார்வையில், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் கோவில் வழியை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் (24), வீரபாண்டி கல்லாங்காட்டை சேர்ந்த ரவிக்குமார் (20), கோபிநாத் (24), பெருந்தொழுவை சேர்ந்த அஜய் (22), வீரபாண்டியை சேர்ந்த விக்னேஷ் (25), அ.தி.மு.க. பிரமுகர் செல்வி, தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த அருண்குமார் (39), கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பினிஷ்குமார் (43) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாராட்டு
இதில் சுபாஷ் சந்திரபோஸ் மீது வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்பட 5 வழக்கும், நல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் என 7 வழக்குகள் உள்ளன. 
ரவிக்குமார் மீது வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்பட 2 வழக்கும், கோபிநாத் மீது நல்லூர் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் உள்ளன.
சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்

Next Story